மானுட வடிவம் — மாறாத ஆற்றலின் வடிவம்:

மானுட வடிவம் — மாறாத ஆற்றலின் வடிவம்:
பிரபஞ்சம் என்னும் நிலையில், ஒரு மூடிய அமைப்பிற்குள் உள்ள மொத்த ஆற்றலின் அளவு மாறாததாகவே உள்ளது. ஆற்றலை புதிதாக உருவாக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது. ஆனால், அது ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கு இடைவிடாது மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது.

இந்த ஆற்றல் மாற்றம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இயற்கையின் நிலையான விதியாகும். கோள்களின் சுழற்சி, காலத்தின் மாற்றம், பருவங்களின் சுழற்சி, உயிரினங்களின் தோற்றமும் பரிணாமமும் என நாம் காணும் அனைத்து நிகழ்வுகளும், மாறாத மொத்த ஆற்றலின் பல்வேறு வெளிப்பாடுகளாகவே நிகழ்கின்றன.

இத்தகைய மாறாத ஆற்றலை, இப்பிரபஞ்சம் முழுவதையும் உள்ளடக்கிய லிங்க வடிவில் சிவபெருமான் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது இந்து ஆன்மீக மரபின் ஆழமான குறியீட்டுப் பார்வையாகும்.

சிவலிங்கம் எனும் முழுமையின் குறியீட்டிற்குள், ஆற்றலின் எண்ணற்ற மாற்றங்களாகப் பிரபஞ்ச இயக்கங்கள் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த மாற்றங்களின் அடிப்படையில் இருப்பது மாறாத முழுமையே.

அதேபோல், மனித உடலும் ஒரு லிங்க வடிவமாகவே விளங்குகிறது. இந்த மானுட வடிவம், மாறிக்கொண்டிருக்கும் ஆற்றலின் வெளிப்பாடுகளைத் தன்னுள் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு மூடிய அமைப்பாக விளங்குகிறது.

குருவின் அருளால் ஒருவர் இதனை வெறும் கருத்தாக அல்லாமல், தன்னுள் நிகழும் உண்மையாக அறிந்துணரும்போது, ஒரு ஆழமான திருப்பம் நிகழ்கிறது.

“நான்” என்பது தனித்த இருப்பு அல்ல;
“எனக்குள் நிகழ்கிறது” என்று தோன்றும் அனைத்தும்,
அதே மாறாத முழுமையின் ஆற்றல் மாற்றங்களே என்பதை அவர் உணர்கிறார்.

அப்போது, மாற்றங்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த இருமை உணர்வு மெல்ல மறைகிறது.

தான் ஒரு தனிப்பட்ட உயிர் என்ற உணர்வைக் கடந்து,
மாறாத மொத்த ஆற்றலின் வடிவாக — தன் இயல்பான முக்த புருஷ நிலையை — அவர் உணர்கிறார்.

அப்போது ..
உள் வெளி..
உள் மூச்சு வெளி மூச்சு..
உடல் உயிர்..
இருக்கு இல்லை..
அறிபவன் அறியப்படுபொருள்.. என்ற
இருமைகள் மறைந்து,
இரண்டற்ற ஒன்றே நிலைத்திருக்கிறது.

இதுவே சிவத்தை வெளியில் காண்பதல்ல;
தன்னுள் விளங்கும் மாறாத  ஆற்றலின் முழுமையாகத் தன்னை அறிதல்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment