
“மூன்று (தென்படாத) வாயில்கள்”
சூஃபி ஞானி ஹஜ்ரத் ரூமி கூறுகிறார்: “பேசுவதற்கு முன், உங்கள் வார்த்தைகளை மூன்று வாயில்கள் வழியாகச் செல்ல விடுங்கள்: அவை உண்மையா? அவை அவசியமா? அவை அன்பானவையா?”
பேசுவது என்பது வேதங்களோ, மத நூல்களோ கூறியவற்றை மேற்கோளாகச் சொல்வதோ, பிறரிடமிருந்து கேட்டறிந்த கருத்துகளை மீண்டும் வெளிப்படுத்துவதோ மட்டுமல்ல. மாறாக, ஒருவர் தம்முள் பெற்ற மெய்ஞான அனுபவங்களை, தம் ஆழ்மனத்தின் குரலாக வெளிப்படுத்தும் சொற்களே உண்மையான வார்த்தைகளாகும்.
அத்தகைய வார்த்தைகளுக்கே, எப்போதும் திறந்தே இருக்கும் மூன்று தெய்வீக வாயில்களில் முதல் வாயில் தென்பட்டு வழிவிடுகிறது. அந்த முதல் வாயிலின் பெயர் உண்மை.
“பாத்திரம் அறிந்து பிச்சை ஈடு” என்பது தமிழ் பழமொழி. அதாவது, இந்த உண்மையின் அவசியத்தை உணர்ந்து அதைப் பெறத் தகுதியான பாத்திரமாகத் தம்மை உருவாக்கியவர்களுக்கு மட்டுமே இரண்டாவது வாயில் தென்படும். அப்போது முதல் வாயில் வழியாக வெளிப்பட்ட உண்மையான வார்த்தைகள் இயல்பாகவே அவர்களைச் சென்றடைகின்றன. அந்த இரண்டாவது வாயிலின் பெயர் அவசியம்.
“அன்பின் வழியது உயிர்நிலை” என்று திருவள்ளுவர் அருளியபடி, மூன்றாவது வாயில் என்பது இந்த உண்மையை உணர்ந்தவரின் உயிர் நிலைபெறும் அன்பின் அக வழியாகும். உண்மையும் அவசியமும் கொண்ட வார்த்தைகள் இந்த மூன்றாவது வாயில் வழியாகப் பயணிக்கும்போதுதான் அவை அன்பானவைகளாக மலர்கின்றன. அந்த மூன்றாவது வாயிலின் பெயர் அன்பு.
கண்களுக்குப் புலனாகாத இந்த மூன்று வாயில்களின் வழியாகச் செல்ல முடியாத வார்த்தைகள், கண்களுக்குப் புலப்படும் எண்ணற்ற புற வாயில்கள் வழியாக வெளிப்பட்டாலும், அவற்றில் உண்மை, அவசியம், அன்பு என்னும் மூன்று தெய்வீக குணங்களும் மங்கியே காணப்படும்.
உண்மையிலிருந்து பிறந்து, அவசியத்தின் வழியாகச் சென்று, அன்பில் நிலைபெறும் வார்த்தைகளே உயிருள்ள வார்த்தைகள்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

