
“இயற்கை மரணம் மற்றும் பாவத்தின் மரணம்.’
“இயற்கை மரணத்தை விட, மக்கள் தங்கள் பாவங்களாலேயே அதிகம் இறக்கிறார்கள்.” ~ ஹஜ்ரத் அலி (அலை)
ஆன்மீக நோக்கில் பார்த்தால், மரணம் என்பது வெறும் உயிர் உடலை விட்டு நீங்குவது மட்டுமல்ல. உயிரின் இறுதி நிலை எவ்வாறு அமைகிறது என்பதில்தான் அதன் உண்மையான பொருள் உள்ளது.
எது இயற்கை மரணம்?
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில், “உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்” என்று, உயிர் மங்கும் அந்த இறுதி நேரத்தில் முருகப்பெருமான் மயில்மேல் எழுந்தருள வேண்டும் என வேண்டுகிறார்.
அதேபோல், அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதியில்,
“உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே” என்று, உயிரும் உடலும் பிரியும் வேளையில் அபிராமி அன்னையும் சிவபெருமானும் தம் முன்னே தோன்றி, முக்தி அருள வேண்டும் எனப் பிரார்த்திக்கிறார்.
இந்த இரு பாடல்களும் ஒரு உயர்ந்த ஆன்மீக உண்மையை உணர்த்துகின்றன. ஒருவர் இறக்கும் தருவாயில் இறைவனோ, குருவோ, தெய்வ அருளாக அவரை அணுகி, அவரது உயிர் அமைதியாக அடங்கி, அமரத்துவப் பாதைக்கு வழிநடத்தப்படுமானால், அதுவே உண்மையான இயற்கை மரணம் எனக் கொள்ளலாம்.
பாவத்தின் மரணம்:
ஆனால் இந்த மெய்ஞான உண்மையை அறியாத பெரும்பாலான மக்கள், தங்கள் அறியாமை, ஆசை, அகந்தை, மற்றும் பாவச் செயல்களின் விளைவாகவே வாழ்ந்தபடியே, ஆனாலும் மரணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது உடல் உயிருடன் இருந்தாலும், இறையுணர்வு இன்றி, அறநெறி இன்றி, ஆன்ம ஞானம் இன்றி, வாழும் நிலை என்பதும் ஒரு வகையான மரணத்திற்கு ஒப்பானது எனலாம்.
இதையே திருவள்ளுவர் தம் திருக்குறளில்,
“ஒத்த தறவோன் உயிர்வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.”
என்று உரைக்கிறார்.
அதாவது, இயற்கை மரணத்தை அறிந்து அதில் நிலைத்து நிற்பவனே உண்மையில் உயிரோடு வாழ்கிறான்; இல்லையெனில் உடலோடு இருந்தாலும், அவன் பாவங்களினால் இறந்தவர்களின் பட்டியலிலேயே வைக்கப்படுவான்.
எனவே, ஆன்மீகப் பார்வையில் உண்மையான வாழ்க்கை என்பது இறையருளோடும், மெஞ்ஞானத்துடனும் வாழ்வதே; உண்மையான இயற்கை மரணம் என்பது இறைவனின் அருளில் உயிர் நிரந்தர அமைதியடைவதே.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

