
சாதம் — பிராசாதம் — பிரசாதம்:
சாதம்:
“சாதம்” என்பதற்கு தமிழில் உண்மை, பூதம், கூட்டம், சோறு போன்ற பொருள்கள் உள்ளன.
சோறு என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல.
பஞ்சபூதங்களால் ஆன இந்த உடம்பில் உள்ள எண்ணற்ற அணுக்கூட்டங்களின் இயக்க சக்தியால் சமைக்கப்படும் உணவு, உடலின் உயிரியல் இயக்கத்திற்கு ஆற்றலாகிறது.
அதனால், சாதம் — உடலைத் தாங்கும் சக்தியின் ஒரு வடிவம்.
பிராசாதம்:
பிராசாதம் என்பதற்கு கோவில், கருவறை, மந்திரம் என்ற பொருள்கள் உள்ளது
உணவு பக்தியுடனும் தூய்மையான மனநிலையுடனும் தயாரிக்கப்பட்டு, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, கருவறையின் புனிதச் சூழலில் மந்திர உச்சாடனங்களுடன் வழிபாட்டில் இணைக்கப்படும் போது, அந்த மந்திர அதிர்வுகளின் மூலம் மேலும் நுண்ணிய சக்தியை ஏற்றுக்கொள்கிறது. அந்த உணவைப் பற்றிய நமது உணர்வும் அணுகுமுறையும் மாறுகிறது.
அதாவது,
சாதம் → அர்ப்பணிப்பு → புனித உணர்வு
என்ற மாற்றம் நிகழ்கிறது.
பிரசாதம்:
பிரசாதம் என்பதற்கு தெளிவு, திருவருள், கடவுளுக்கு படைக்கப்படும் உணவு என்ற பொருள்கள் உள்ளது.
அவ்வாறு இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவு, திருவருள் கொண்ட சக்தியாக உருமாறி, உண்மையான பக்தி உணர்வுடன் வழங்கப்பட்டு, அதே உணர்வுடன் ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது, அவருள் தோன்றும் அருளின் தெளிவே — பிரசாதத்தின் உண்மையான மகிமை எனக் கொள்ளலாம்.
பிரசாதம் என்பது வெறும் உணவு அல்ல;
அருளை ஏற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பு.
அதனால், இத்தகைய மகிமை பொருந்திய பிரசாதம் வீணடிக்கப்படும்போது, அருளாக அனுபவிக்க வேண்டியது அலட்சியத்தால் மருளாக மாறி, அதை வீணடிப்பவரின் மனதில் குழப்பத்தை உருவாக்கும் என்ற ஆன்மிகப் பார்வையும் உள்ளது.
அதேபோல், முறையான வழிபாட்டு உணர்வும் அர்ப்பணிப்பும் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவை வெறும் “பிரசாதம்” என்ற பெயரில் வழங்கினால், அதை உட்கொள்பவரின் பசி தீரலாம்; ஆனால் பிரசாதத்தின் அடிப்படையாகக் கருதப்படும் அருள்-தெளிவு அவசியம் ஏற்படாது.
எனவே,
சாதம் — உடலுக்கான உணவு.
பிராசாதம் — அர்ப்பணிப்பின் மூலம் புனிதமாக்கப்படும் உணவு.
பிரசாதம் — அருளுணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்படும் உணவு.
உணவை உண்பது வயிற்றை நிரப்பலாம்;
பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது உள்ளத்தைத் திறக்கலாம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

