
தெய்வீக சக்தி — “அதைத் தேடுங்கள்…”
“உங்களுக்குள் உங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தேடுங்கள்.”
இது ஹஸ்ரத் ரூமியின் வாக்காகப் பரவலாகக் கூறப்படுகிறது.
அதே உண்மையை வேறொரு கோணத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியும் சுட்டிக்காட்டுகிறார்:
“உங்களை இயக்கும் அருளின் சக்தியாலேயே நீங்கள் இயங்குகிறீர்கள்.”
இந்த இரு கூற்றுகளையும் ஆழமாக நோக்கினால், அவை மனிதனை வெளிப்புற உலகிலிருந்து உள்நோக்கித் திருப்புகின்றன.
நம்மை உயிரோடு வைத்திருப்பது என்ன?
நாம் சுவாசிக்கிறோம்.
இதயம் துடிக்கிறது.
இரத்தம் ஓடுகிறது.
உணவு செரிக்கிறது.
உடல் வளர்கிறது.
மனம் சிந்திக்கிறது.
புலன்கள் உணர்கின்றன.
உறக்கத்தில் நாம் எதையும் செய்யாமல் இருந்தாலும், உடலின் உயிரியல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இவற்றை இயக்கும் அந்த அடிப்படை சக்தி என்ன?
நவீன இயற்பியலில் ஆற்றல் அழிக்கப்படவோ உருவாக்கப்படவோ முடியாது என்ற கருத்து உள்ளது. அதேவேளை, வேதாந்தமும் சூஃபி ஞான மரபுகளும், உயிரின் பின்னால் விளங்கும் அடிப்படை உண்மையை வெவ்வேறு மொழிகளில் சுட்டிக்காட்டுகின்றன.
ஷ்ரோடிங்கர் போன்ற சிந்தனையாளர்கள் வேதாந்தத்தின் “ஒன்றே பிரக்ஞை” என்ற கருத்தினால் ஆழமாக ஈர்க்கப்பட்டிருந்தனர். அவரது தத்துவச் சிந்தனைகளில், தனித்தனி உயிர்களின் பின்னாலும் ஒரே பிரக்ஞை, ஒரே மனம் விளங்குகிறது என்ற பார்வை காணப்படுகிறது.
இவ்வுலகில் தோன்றும் எண்ணற்ற உயிரினங்கள் உருவத்திலும் தன்மையிலும் வேறுபட்டதாகத் தோன்றினாலும், அவற்றின் உயிர் இயக்கத்தின் அடிப்படையில் ஒரு பொதுவான மர்மம் உள்ளது.
ஒவ்வொரு மனித உடலும் எண்ணற்ற உயிரணுக்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
“அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.”
இங்கே “அவன்” என்பது உருவமற்ற பிரம்மம்;
அல்லாஹ்;
இறைவன்;
அல்லது அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்று வெவ்வேறு மரபுகள் அழைக்கும் அந்த ஒரே உண்மையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.
“அணு” என்று இங்கு கூறப்படுவது உயிரின் நுண்ணிய அமைப்பைக் குறிக்கும் உவமையாக எடுத்துக்கொள்ளலாம்.
அவனுடைய பண்பு — அசைவித்தல்.
ஒரு பொருளையும் அதன் பண்பையும் முற்றிலும் பிரித்துப் பார்க்க முடியாதது போல, பரம்பொருளையும் அதன் வெளிப்பாடாகத் தோன்றும் இயக்க சக்தியையும் பிரிக்க முடியாது.
அந்த வகையில், எண்ணற்ற உயிரணுக்களால் உருவாக்கப்பட்ட இந்த மனித தேகத்தின் ஒவ்வொரு அசைவின் பின்னாலும் விளங்குவது அந்த மறைமுகமான சக்தியே.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
அந்த சக்தியே உயிரணுக்களுக்கு உயிரூட்டுகிறது.
அது எங்கே இருக்கிறது?
ஒவ்வொரு உள்மூச்சிற்கும் வெளி மூச்சிற்கும் இடையில்…
ஒவ்வொரு சிந்தனைக்கும் முன்பும்…
ஒவ்வொரு அசைவுக்கும் முன்பும்…
ஒவ்வொரு உணர்வுக்கும் முன்பும்…
அது இருந்து கொண்டு இருக்கிறது.
அதைக் கவனியுங்கள்.
உடலின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதன் இருப்பை உணருங்கள்.
மூச்சு வருவதற்கு முன்பே இருக்கும் அந்த இருப்பை…
சிந்தனை எழுவதற்கு முன்பே இருக்கும் அந்த அமைதியை…
செயல் நிகழ்வதற்கு முன்பே இருக்கும் அந்த சக்தியை…
கண்டறிந்து உணருங்கள்.
அந்த சக்தியே—
தோற்றத்திற்கும் மறைவிற்கும்,
இருப்பிற்கும் இல்லாமைக்கும்,
வளர்ச்சிக்கும் தேய்மானத்திற்கும்,
அறிவிற்கும் அதன் செயல்பாட்டிற்கும்,
மனதிற்கும் அதன் சிந்தனைக்கும்,
உள்மூச்சிற்கும் வெளிமூச்சிற்கும்,
உறக்கத்திற்கும் விழிப்பிற்கும்,
உடலின் ஒவ்வொரு அசைவிற்கும்,
புலன்களின் வழியே தோன்றும் ஒவ்வொரு உணர்விற்கும்—
அடிப்படையாக விளங்குகிறது என்பதை குரு அருளால் ஒருவர் அனுபவ பூர்வமாக உணரத் தொடங்குகிறார்.
அப்போது அவர் அந்த சக்தியைப் பற்றி அறிந்தவர் மட்டுமல்ல;
அந்த சக்தியின் உணர்விலேயே நிலைபெறத் தொடங்குகிறார்.
உள்ளுக்குள் விளங்கும் அந்த சக்தியை, ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு சிந்தனைக்கும் முன்னாலும், ஒவ்வொரு அசைவுக்கும் முன்னாலும் இடைவிடாது கவனித்துக் கொண்டிருக்கும்போது…
ஒரு கட்டத்தில்,
“இந்த உடலும் அதுவே.
இந்த உயிரும் அதுவே.
இந்த உலகமும் அதுவே.
அதற்கு வேறாக நான் என்று ஒன்றுமில்லை.”
என்ற உணர்வு உதயமாகிறது.
அப்போது “நான்” மற்றும் “அது” என்ற இருமை மெல்ல மறைகிறது.
இருப்பு — இல்லை,
அசைவு — அசையாமை,
செயல் — செயல் அற்றது,
போக்கு — வரத்து,
இருள் — ஒளி
என்ற அனைத்து பேதங்களையும் கடந்து…
உருவமற்றதும், எல்லையற்றதும், எங்கும் நிறைந்ததுமான பிரம்ம சக்தியில் ஒன்றிப்போகிறான்.
“உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.”
இது திருமூலரின் திருமந்திரத்தின் இறுதிப் பாடலாகக் கருதப்படுகிறது.
உணர்வும் அவனே…
உயிரும் அவனே…
புணர்வும் அவனே…
புலவியும் அவனே…
என்று திருமூலர் சுட்டிக்காட்டும் இந்தப் பார்வை, தனித்தனியாகத் தோன்றுகின்ற அனைத்திற்கும் அடிப்படையில் விளங்கும் ஒரே பரம்பொருளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.
அதுவே ரூமியின்,
“உங்களுக்குள் உங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தேடுங்கள்.”
என்ற அழைப்பின் ஆழமான ஆன்மீகப் பொருளாக இருக்கலாம்.
அதை அறிதல் — ஞானம்.
அதில் நிலைபெற்று,
“அது வேறு, நான் வேறு” என்ற பேதம் நீங்கி,
அதுவாகவே ஆகுதல் — முக்தி.
அதன்பின்…
தனித்த “நான்” என்ற நிலையில்
அவன் மீண்டும் திரும்புவதில்லை.
ஏனெனில்,
அவன் தேடியது அவனுக்குள்ளேயே இருந்தது.
அவன் தேடிய சக்தியே
அவனுடைய உயிராகவும்,
அவனுடைய உணர்வாகவும்,
அவனுடைய இருப்பாகவும்
எப்போதும் விளங்கிக் கொண்டிருந்தது.
தேடியவன் மறைந்தான்.
தேடப்பட்டவன் மட்டுமே நிலைத்தான்.
அதுவே—
“தத் த்வம் அசி” —
அது நீயே.
ஶ்ரீ குருப்யோ நமஹ் 🙏

