
யாருடைய அகங்காரம் சரணடைய முடியும்?
ரமண மகரிஷி கூறுகிறார்: “தன்னைவிட உயர்ந்த சக்தியை உணரும்போது மட்டுமே அகங்காரம் அடிபணிகிறது. அத்தகைய உணர்தலே சரணாகதி; அதுவே தன்னடக்கமும் ஆகும்.”
எதிர்கொள்ள முடியாத ஓர் உயர்ந்த சக்தியாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட “அகங்காரம்” கருதுவது அவரவர்களது மரணத்தையே, ஏனெனில், எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் தலை தூக்கும் வரையில், ஒருவரது அகங்காரம் அடிபணியாது. மரணம் ஒன்றே எதிர்கொள்ள முடியாத ஒரே சக்தியாக ஒவ்வொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு அகங்காரமானது மரணத்தை எதிர்கொள்ள முடியாது என்பதை முழுமையாக அறிந்திருந்தாலும், அதுவும் கூட இறந்த அக்கணமே மறுபடியும் எங்கோ எதிலோ பிறக்க வேண்டும் என்பதையும் முழுமையாக அறிந்து, அனுபவரீதியாகவும் அதை உணர்ந்த பின்னரே எனலாம்.
எனினும் மறுபிறப்பு என்பது சனாதன தர்மத்தை தவிர வேறு எந்த மதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. மாறாக தீர்ப்பு நாள் என்று ஒன்று உண்டு என்பதை மட்டும் அங்கீகரித்து, வாழும் வரை பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்பதே மற்ற மதத்தின் குறிக்கோளாக உள்ளது. எனவே அவர்களது வாழ்வில் எதிர்கொள்ள முடியாதது என்று எதுவும் இல்லை என்பதால், அகங்காரமானது அடிபணியும் சாத்தியமில்லை. மாறாக அகங்காரத்திற்கு வணங்கும் இறைவனிடத்தில் ஓரளவு பயம் மட்டுமே இருக்கும்.
சனாதன தர்மத்திலும் கூட மறுபிறப்பு என்பது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அனுபவரீதியாக அது அறிந்து உணரப்படாததால், வெறும் கொள்கை அளவிலேயே இருக்கிறது. அதன் காரணம் மரணம் மற்றும் மறுபிறப்பு இவற்றைப் பற்றி அறிந்திருந்தாலும், முழுமையான சரணாகதி என்பது ஏற்படும் வாய்ப்பு அங்கும் இல்லை. மாறாக மரணம் நெருங்கும் சமயத்தில் ஒருவித பயம் உண்டாகிறது, எனினும் நினைவுகள் அங்கு மங்கிப் போய் விடுவதால், அகங்காரத்தால் அடி பணிய முடியாமல் போய்விடுகிறது.
அதனால் எவர் ஒருவருக்கு மறுபிறப்பை பற்றிய அனுபவரீதியான ஞானம் தற்போதே உருவாகிறதோ, அத்தகையவருக்கே, மரணத்தைப் பற்றி பயமும், அம் மரணத்தை எதிர்கொள்ளும் உபாயத்தை அறிந்த ஒருவர் உளர் என்றும் அறியும் போது, அத்தகையவரிடம் அகங்காரமானது இயல்பாகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் என்பதே ரமண மகரிஷியின் உபதேச சாரம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

