திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 1717

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 1717
“தா பரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்
மா பரத்து உண்மை வழி படு ஆர் இல்லை
மா பரத்து உண்மை வழி படு ஆளர்க்கும்
பூ அகத்து உள் நின்ற பொன் கொடி ஆகுமே”.

தா பரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்:
தா: என்பதற்கு வலிமை மற்றும் பரத்து: என்பதற்கு விரித்தல் என்றும் தமிழ் அகராதியில் பொருள்கள் உள்ளது:
அதாவது எங்கும் விரிந்த, பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய, வலிமை மிகுந்த, அண்ட வடிவமாகவே இருப்பது சிவலிங்கம். அவ்வண்டத்துக்குள், அதாவது சிவலிங்க வடிவத்திற்கு உள், அதே அண்டத்தின் அம்சங்களை கொண்டு பிண்ட வடிவமாக விளங்கும் மானுட யாக்கை உள் நின்றால், அத்தகையவர்க்கே வல்லமை மிகுந்த சிவனின் அருள் கிட்டும்.
எவ்வாறு கடலின் அம்சத்திலிருந்து வெளிப்பட்ட அலை தன்னை கடலுக்கு அந்நியமாக கருதி, கடலிலிருந்து வெளிப்புறமாக நிற்க முடியாதோ, ஆனால் கடலுக்கு உள் அடங்கியே நிற்குமோ, அவ்வாறே அண்டத்தின் அம்சமான சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு மானுடயாக்கையும், சிவலிங்கத்திற்கு அன்னியமாக தன்னை கருதி வெளிப்புறமாக நிற்க முடியாது, ஆனால் சிவலிங்கத்திற்கு உள் அடங்கியே நிற்கும். அவ்வாறு தம்மை உணர்ந்தவர்க்கே வல்லமை மிகுந்த சிவனின் அருள் கிட்டும்.

மா பரத்து உண்மை வழி படு ஆர் இல்லை:
மா: என்பதற்கு ஒன்று என்று பொருள் உள்ளது. அவ்வாறு அண்ட வடிவான சிவலிங்கத்துக்கு உள், தாமும் ஒன்றன நின்றுள்ள உண்மையை உணர்ந்து, வழிபடுவார் எவரும் இல்லை.

மா பரத்து உண்மை வழி படு ஆளர்க்கும்:
அவ்வாறு தம் மானுட யாகையும், தாம் வழிபடும் சிவலிங்க வடிவத்திற்கு உள் ஒன்றாய் நிற்கும் இவ்வுண்மையை குரு அருளால் உணர்ந்து, வழிபடும் திறமை உடையவருக்கு…

பூ அகத்து உள் நின்ற பொன் கொடி ஆகுமே:
பூவின் அகத்து உள் நின்ற நறுமணம் போன்று, இந்த உண்மையை உணர்ந்து வழிபடுபவரின் அகத்து உள் உறைந்திருந்த சிவஜோதி, கொடி போன்று யாக்கை முழுவதும் பரவி நிற்குமே.

இத்திருமந்திரத்தின் சாராம்சம்: சிவனை வெளியில் ஒரு தனிப்பொருளாகக் காணாமல், அண்டமாக விளங்கும் சிவலிங்க வடிவத்திற்கு உள், பிண்டமாக விளங்கும் தன்னையும், அந்தப் பிண்டத்தின் அகத்து உள் உறைந்திருந்த சிவஜோதியையும் ஒன்றாக உணர்வதே உண்மையான சிவ வழிபாடு.
திருச்சிற்றம்பலம், 🙏