
“நீர் விளையாடேல்”
இது அவ்வையார் இயற்றிய ஆத்திசூடி நூலில் இடம்பெறும் 69-வது அறிவுரையாகும்.
மேலோட்டமான பொருள் :
“நீரில் தேவையின்றி விளையாடாதே” ஆழம் அறியாத நீர்நிலைகளில் இறங்கி விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, நீர்நிலைகளில் கவனமின்றி விளையாடி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதே இதன் வெளிப்படையான அறிவுரையாகக் கொள்ளப்படுகிறது.
ஆனால், இன்றைய காலத்தில் நீர் விளையாட்டு என்பது பாதுகாப்பான சூழலில் ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும் இருக்கிறது. எனவே, இந்த அறிவுரையை வெறும் புறப்பொருளாக மட்டும் பார்க்காமல், அதன் மெய்ப்பொருளை உள்ளார்ந்த நிலையில் சிந்தித்துப் பார்க்கலாம்.
மெய்ப்பொருள் விளக்கம்:
“நீர்” என்ற சொல்லுக்கு நீர் என்ற பொருளைத் தவிர, உடலின் இரத்தம் என்றும், மணியின் ஒளி என்றும் பொருள் கொள்ளும் வழக்குமுண்டு.
இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, “நீர் விளையாடேல்” என்பது:
ஒருவர் அறத்திற்கு முரண்பாடாக காம களியாட்டங்களில் ஈடுபட்டு விளையாடும் போது, அத்தகையவர் உடம்பினில் உள்ள நீரின் அம்சமான ரத்தமானது, உயிர் சக்தியாக வெளிப்பட்டு பெருமளவில் விரயமாகும். அதன் காரணம் நாபிக் கமலத்தில் உயிர் வித்தாக விளங்கிக் கொண்டு, மந்திரமாகவும், ஔஷதமாகவும், விழிப்புணர்வாகவும் வெளிப்பட வேண்டிய “சிவ மணியானது” ஒளி குன்றி மங்கி போய், இவ் உடம்பை சவமாக்கி விட்டுச்சென்று விடும் என்பதே இதன் மெய்ப்பொருள் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
“விந்து விட்டவன் நொந்து கெட்டான்” என்னும் தமிழ் பழமொழியும், அவ்வையின் ஆத்திச்சூடியின் இந்த வரிகளுக்கு வலிமை சேர்க்கிறது.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

