திருக்குறள் 238 – மெய்ப்பொருள் விளக்கம்:

 
வசையென்ப வையத்தார்க் கெல்லாம்
இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.
திருக்குறள்: அறத்துப்பால்: 238

பொருள்:
தமக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாகிய இசையைப் பெறாவிட்டால், உலகத்தார் அனைவரும் அத்தகைய வாழ்க்கையைப் பழி என்று கூறுவர்.


இந்தக் குறளை,
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”
என்னும் திருவள்ளுவரின் மற்றொரு திருக்குறளின் அடிப்படையில் நாம் நோக்குவோம்.


இசை என்பதற்கு ஓசை, சொல், புகழ், என்ற பொருள்கள் உள்ளன.


மனிதப் பிறவி என்பது தனக்காக மட்டும் வாழ்வதற்கல்ல. உள்ளே உயிருக்கு, இறை இசை வழியே ஊதியமாகப் பெற்ற அருளை, வெளியே ஈதலாகப் பாய்ச்சுவதற்கே.


“வசை” என்பதற்கு நிந்தை, பழிப்பு, இகழ்ச்சி, மலட்டுப்பசு, பசு போன்ற பொருள்களும் உள்ளன.


பசு, தன் உடலில் உணவினால் உருவாகும் இரத்தத்தைப் பாலாக மாற்றி, அதைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் பிற உயிர்களுக்கு அளிக்கிறது.
அவ்வாறு பால் தராத பசு, மலட்டுப் பசு என்று கருதப்படுகிறது.


அதேபோல், மனிதன் தன் உள் பிராணங்களுக்கு இசைபட வாழ்தல் மூலம், ஊதியமாகப் பெற்ற இறையருளை, தன் வெளிப் பிராணங்கள் வழியே வெளி உலகிற்கு ஈதலாக, ஆசீர்வாதமாக வழங்க வேண்டும்.அப்போதுதான் அவனுடைய வாழ்வு, அவனுக்குப் பிறகும் எச்சமாகத் தொடர்கிறது.


அவ்வாறு, அவனுள் தோன்றிய இசையின் எச்சம் அவனிடமிருந்து வெளிப்படாமல் போனால், உலகத்தார் அனைவருக்கும் அத்தகைய வாழ்க்கை “பழி” என்ற சொல்லுக்குரியதாகிவிடும்.


இங்கே “எச்சம்” என்பது வெறும் பெயரும் புகழும் மட்டுமல்ல.
ஒருவர் தன்னுள் பெற்ற நன்மை, இறையருள், மெய்ஞானம் ஆகியவை, அவருக்குப் பிறகும் பிற உயிர்களின் வாழ்வில் தொடர்ந்து செயல்படுவது என்ற உயர்ந்த பொருளிலும் இதை எடுத்துக்கொள்ளலாம்.


இக்கருத்தை ஒத்த ஒரு வாசகம் பைபிளிலும் காணப்படுகிறது:
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.”
உப்பு தன் சாரத்தை இழந்துவிட்டால், அது எதற்கும் பயன்படாது என்ற உவமையும் அங்கே கூறப்படுகிறது.


அதுபோலவே, மனிதப் பிறவி என்பது தன்னுள் பெற்ற இறையருளையும் மெய்யுணர்வையும் தன்னிடமே வைத்துக்கொள்வதற்காக அல்ல.
அதை உலகிற்கு ஈதலாகவும், அருளாகவும், ஆசீர்வாதமாகவும் வெளிப்படுத்துவதற்காக.


எனவேதான் வள்ளுவர் பெருமான்,
“இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்,
வசையென்ப வையத்தார்க் கெல்லாம்”
என்னும் ஆழமான பொருளில் இத்திருக்குறளை உலகிற்கு ஈந்துள்ளார் என்று, இந்த மெய்ப்பொருள் நோக்கில் நாம் உணரலாம்.


வாழ்க வள்ளுவம்!  வாழ்க தமிழ்!

One response to “திருக்குறள் 238 – மெய்ப்பொருள் விளக்கம்:”

  1. ​​ஒரு மனிதன் தன் அகந்தையை (Self/Ego) அழித்து, அன்பு, கருணை, உண்மை ஆகியவற்றால் வாழும்போது, அவனறியாமலே அவனைச் சுற்றி இறைத்தன்மை கமழ்கிறது. அந்தத் தூய்மையான வாழ்க்கையின் ‘நறுமணமே’ (Spiritual Legacy) இவ்வுலகில் எச்சமாக (மீதியாக) நிற்கிறது.​. இறப்பிற்குப் பின் நிற்கும் “எச்சம்” (Enduring Legacy)​
    சூஃபி கவிஞர் ஜலாலுத்தீன் ரூமி (Rumi) கூறுவார்:​”உன் மரணத்திற்குப் பின் உனக்கான கல்லறையை இந்த நிலத்தில் தேடாதே; மனிதர்களின் இதயங்களில் அதைக் கண்டடை.”​வள்ளுவரும், உடல் அழிந்த பிறகும் நிலைத்து நிற்கும் “எச்சம்” பற்றியே பேசுகிறார்.​வசை (Disgrace): உலகியல் ரீதியாகப் வாழ்ந்து, உலக இச்சைகளிலேயே மூழ்கி, எந்த ஒரு ஆன்மீக அடையாளமும் அல்லது மனிதநேயப் பங்களிப்பும் இல்லாமல் இறந்து போவது—ஒரு மனிதனுக்கு நேரும் மிகப்பெரிய இழப்பு (வசை).​இசை (Fame/Legacy): உலகிற்கு அன்பையும், வெளிச்சத்தையும் வழங்கிவிட்டுச் செல்லும் ஆன்மீகச் சுவடு.​ ​
    சூஃபிக்கள் புகழை இறைவனின் குணங்களில் ஒன்றாகக் காண்பார்கள். ஒரு மனிதன் இறைவனின் கருணைக்குக் கண்ணாடியாக (Mirror of God) மாறும்போது, அந்தப் புகழ் உண்மையில் அந்த மனிதனுக்குரியது அல்ல; அது அவன் வழியே வெளிப்படும் இறைவனின் புகழ் (Divine Light).​அத்தகைய தூய்மையான பாதையில் வாழாமல், வெறும் உடலாக மட்டும் வாழ்ந்து மடிவதை சூஃபித்துவம் ‘விழிப்புணர்வினமை’ (Unconsciousness/Ghafliyah) என்று அழைக்கும். வள்ளுவர் அதைத் தான் “வசை” என்கிறார்.​​

    Liked by 1 person

Leave a comment