திருமூலரின் திருமந்திரம் – உரை எண்: 1444:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலரின் திருமந்திரம் – உரை எண்: 1444:
“உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர்ப்பெறும் ஆவாகனம் புறப்பூசை
செயற்கு இடை நேசம் சிவபூசை யாமே.”

உயிர்க்கு உயிராய் நிற்றல் – ஒண் ஞான பூசை:
“உங்களுக்குள் ஒரு உந்தும் சக்தி இருக்கிறது; அது உங்களுக்கு உயிர் கொடுக்கிறது. அதைத் தேடுங்கள்” என்று சூஃபி ஞானி ஹஜ்ரத் ரூமி கூறுகிறார்.

அந்த உந்தும் சக்தியானது, ஒவ்வொரு உள்மூச்சுக்கும் வெளிமூச்சுக்கும் இடையிலும், ஒவ்வொரு வெளிமூச்சுக்கும் உள்மூச்சுக்கும் இடையிலும் உயிர்க்கு உயிராய் நிலைத்திருக்கிறது. அந்த இடைவெளியில் அது இருப்பதை அறிந்து, அதனை உணர்ந்தபடியே நிலைத்திருப்பதே “ஒண் ஞான பூசை” ஆகும்.

உயிர்க்கு ஒளி நோக்கல் – மகா யோக பூசை:
இவ்வாறு உயிர்க்கு உயிராய் நிற்கும் அந்த இடைவெளி உணரப்படும் போது, அதன் ஒளி உள்ளே சென்று வெளியே வரும் ஒவ்வொரு உயிர்மூச்சிலும் பரவி நிலைத்திருப்பதை விழிப்புணர்வுடன் நோக்குவது “மகா யோக பூசை” ஆகும்.

உயிர்ப்பெறும் ஆவாகனம் – புறப்பூசை:
அவ்வாறு ஒளியாக விளங்கும் உந்தும் சக்தியால் இயக்கப்படும் வாசி எனப்படும் உள்மூச்சும் வெளிமூச்சும், தொடும் அனைத்தும், உயிரோட்டம் பெற்ற அதிர்வெண் நிறைந்ததாக மாற்றுகின்றன. அவ்வாறு ஆவாகனம் செய்யப்பெற்று  உயிர்ப்பெறும் அனைத்துப் பொருள்களும் புறச் சிவபூசைக்கு உகந்ததாக மாறுகிறது.

செயற்கு இடை நேசம் – சிவபூசை யாமே:
இத்தகைய ஞான பூசை, மகாயோக பூசை, புறப்பூசை ஆகியவற்றின் மூலம் அன்பு பெருக்கெடுக்கும் போது, “அன்பே சிவம்” என்ற உண்மை அனுபவமாகிறது.

அப்போது ஒவ்வொரு செயலுக்கும் செய்பவருக்கும் இடையில் உந்தும் சக்தியாக இருப்பது அன்பே சிவம் என்பதை உணர்கிறோம்.
அதாவது:
– சுவாசத்திற்கும் சுவாசிப்பவருக்கும் இடையில்,
– அறிவிற்கும் அறிபவருக்கும் இடையில்,
– சிந்தனைக்கும் சிந்திப்பவருக்கும் இடையில்,
– பார்வைக்கும் பார்ப்பவருக்கும் இடையில்,
– ஒலிக்கும் கேட்பவருக்கும் இடையில்,
– வாக்கிற்கும் பேசுபவருக்கும் இடையில்,
– உணர்விற்கும் உணர்பவருக்கும் இடையில்,
– உணவிற்கும் உண்பவருக்கும் இடையில்,
– மேலும் அனைத்து செயல்களுக்கும் செய்பவருக்கும் இடையில்,
அன்பே சிவமாக, உயிர்க்கு உயிராய், உந்தும் சக்தியாக அமர்ந்திருப்பதை உணர்வதே உயர்ந்த சிவபூசையாகும்.
திருச்சிற்றம்பலம் 🙏
_________________________________________________________________________________________
குறிப்பு:
காஷ்மீர் சைவத்தின் விஜ்ஞான பைரவ தந்திரம் சுலோகங்கள் 22–25-இல்,

பைரவர் காலம், இடம், திசை ஆகியவற்றுடன் தொடர்பு உடையவரா?
பைரவர் நவாத்மா (ஒன்பது அம்சங்களின் பரம்பொருள்) தானா?
மூன்று சக்திகளின் வடிவான திரிசிரர் தானா?
நாதம், பிந்து, சந்திரார்த்தம் போன்ற நுண்ணிய யோகத் தத்துவங்களின் வடிவமா?
சக்கரங்களில் நிலைபெறும் மனமா?
சக்தியின் சொரூபமா?
பரா, பராபரா, அபரா என்ற மூன்று நிலைகளின் முழுமையா?
பின்னர் தேவி ஒரு ஆழமான தர்க்கத்தை முன்வைக்கிறார்:
பரம்பொருள் இவற்றில் ஏதேனும் ஒரு தத்துவத்திற்குள் மட்டுமே அடங்கிவிட்டால், அது இனி எல்லையற்ற பரம்பொருளாக இருக்க முடியாது.
உண்மையான பைரவர்:
ஒலியால் வரையறுக்கப்படுபவர் அல்ல.
வடிவத்தால் கட்டுப்படுபவர் அல்ல.
உடலால் வரம்புபடுத்தப்படுபவர் அல்ல.
எந்த ஒரு தத்துவத்தின் எல்லையிலும் அடைக்கப்படுபவர் அல்ல.
இவ்வாறு தேவி அனைத்து கருத்துகளையும் முன்வைத்து, அவற்றைத் தாண்டிய பரம்பொருளின் உண்மையை வெளிப்படுத்துமாறு பைரவரை கேட்கும் கேள்விகளுக்கும்,

அதற்கு பைரவர் சுலோகங்கள் 26–28-இல்,

சுலோகம் 26:
மூச்சு உள்ளேயும் வெளியேயும் செல்லாமல் இயல்பாக ஒரு கணம் நிலைபெறும் இடைவெளி உண்டு. அந்த இடைவெளியில் எண்ணமின்றி விழிப்புணர்வுடன் நிலைத்தால், பைரவ உணர்வு வெளிப்படுகிறது.
சுலோகம் 27:
உள்ளிழுத்த மூச்சின் முடிவிலும், வெளியேற்றிய மூச்சின் முடிவிலும் இயல்பாக ஏற்படும் அமைதியான இடைவெளியை உணர வேண்டும். அந்த அமைதியே சாந்த சக்தி. அதில் நிலைத்தால் மனம் அமைதியடைந்து சிவ சைதன்யம் தானாக வெளிப்படும்.
சுலோகம் 28:
மூலாதாரத்தில் இருந்து ஒளிக்கதிரைப் போல எழும் நுண்ணிய சக்தியை மனத்தில் தியானித்து, அது மேலும் மேலும் நுட்பமடைந்து த்வாதசாந்தம் (தலையின் மேல் பன்னிரண்டு விரல் அளவிலான நுண்ணிய மையம்) வரை சென்று அங்கே கரைந்துவிடுவதாக உணர வேண்டும். அந்த கரைதலில்தான் பைரவ சைதன்யம் உதயமாகிறது.

என்று விளக்கும் உள்முக தியான வழிமுறைகளுக்கும், அதே சிவாகம மரபில் தோன்றிய திருமூலரின் இத்திருமந்திர உரை ஆழமான விளக்கமாக கருதப்படலாம். குறிப்பாக, மூச்சின் இடைவெளி, உயிர்க்கு உயிராய் நிற்கும் சக்தி, அதன் ஒளி, மற்றும் எல்லாச் செயல்களுக்கும் இடையில் விளங்கும் சிவசக்தி ஆகிய அனுபவங்கள், இரு மரபுகளிலும் ஒரே ஆன்மீக உண்மையை வெவ்வேறு மொழிநடையில் சுட்டிக்காட்டுகின்றன.

Leave a comment