
संस्कृतम्
यथालोकेन दीपस्य किरणैर्भास्करस्य च ।
ज्ञायते दिग्विभागादि तद्वच्छक्त्या शिवः प्रिये ॥ २१ ॥
IAST Transliteration
yathālokena dīpasya kiraṇair bhāskarasya ca |
jñāyate digvibhāgādi tadvac chaktyā śivaḥ priye || 21 ||
பொருள்
“ஒரு விளக்கின் ஒளியாலும் சூரியனின் கதிர்களாலும் திசைகளும் வெளியின் பரப்பும் அறியப்படுவது போல, அன்பே! சக்தியின் மூலமாகவே சிவனும் அறியப்படுகிறார்.”
பொருள் விளக்கம்
நாபிக் கமலத்தில் நாதமும் விந்துவும் கலந்து சிவஜோதியாக விளங்கும் பரமசிவமே அனைத்திற்கும் மூலமாக இருக்கிறார். அந்தச் சிவஜோதியிலிருந்து வெளிப்படும் பிராணமும் பிராண சக்திகளும், அவற்றால் உருவாகும் ஐம்புலன்கள், அந்தப் புலன்களால் அனுபவிக்கப்படும் இந்த உடலும் பிரபஞ்சமும், அனைத்தும் சக்தியின் வெளிப்பாடுகளே.
ஆன்மிகப் பயணத்தில் சாதகன் இந்த வெளிப்பாடுகளை அவற்றின் மூலத்தை நோக்கிப் பின்னோக்கி ஆராய்கிறான். பிரபஞ்சத்திலிருந்து புலன்களை நோக்கி, புலன்களிலிருந்து பிராணங்களை நோக்கி, பிராணங்களில் இருந்து சக்தியை நோக்கி, சக்தியிலிருந்து சுத்த சிவஜோதியை நோக்கி உள்ளார்ந்து செல்லும்போது, சிவத்தின் தத்துவம் வெளிப்படுகிறது.
சூஃபி ஞானி ஹஜ்ரத் ரூமி கூறுகிறார்:
“ஒளி அதன் மூலத்திற்கு திரும்பும் போது, அது ஒளிரச் செய்தவற்றிலிருந்து எதையும் எடுத்துச் செல்லாது.”
அதுபோன்று சக்தியின் அம்சங்களாக பிரதிபலித்த இப்பிரபஞ்சம், பிரபஞ்சத்தின் தன்மைகளான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களைக் கொண்டு உருவான இத்தேகம், இத்தகத்தின் கட்டமைப்புக்கு காரணமான இப்பிராணங்கள், இவைகள் எதையும் சக்தி எடுத்துச் செல்லாமல் தன் மூலமான சுத்த சிவஜோதிக்குள் ஐக்கியமாகிவிடும்.
அதுவே சக்தியின் வழியாக சிவத்தை உணரும் விஞ்ஞான பைரவ தந்திரத்தின் இந்தச் சுலோகத்தின் மையச் செய்தியாகும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

