
संस्कृतम्
शक्त्यवस्थाप्रविष्टस्य निर्विभागेन भावना ।
तदासौ शिवरूपी स्यात् शैवी मुखमिहोच्यते ॥ २० ॥
IAST Transliteration
śakty-avasthā-praviṣṭasya nirvibhāgena bhāvanā |
tadāsau śivarūpī syāt śaivī mukham ihocyate || 20 ||
பொருள்:
“ஒருவர் சக்தியின் நிலையில் ஆழ்ந்து, சக்திக்கும் சிவனுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்ற உணர்வில் நிலைபெறும்போது, அவர் சிவனின் இயல்பையே அடைகிறார். ஆகவே, ஆகமங்களில் சக்தியே சிவனை அடைவதற்கான நுழைவாயில் (முகம்) என்று கூறப்படுகிறது.”
பொருள் விளக்கம்:
ஒவ்வொரு உயிரிலும் வெளிப்படும் சக்தி, பிராணனாக இயங்குகிறது. ஒரு கனமான பொருளைத் தூக்க முயலும்போது, ஒருவர் இயல்பாகவே மூச்சை ஆழமாக உள்ளிழுத்து சில கணங்கள் நிறுத்துகிறார். அந்த நேரத்தில், சிதறியிருந்த பிராண சக்தி ஒருமுகப்பட்டு, நாபிக் கமலத்தில் அந்தர்யாமியாக விளங்கும் சிவத்தில் ஒன்றிப் போகும். அதாவது, சக்தி தன் ஆதாரமான சிவநிலையை அடைகிறது.
அவ்வாறு சக்தியும் சிவனும் வேறுபாடின்றி ஒன்றாகும் அந்- நிலையில், தூய விழிப்புணர்வின் ஆற்றல் முகம், கண்கள், கைகள் மற்றும் உடல் முழுவதும் பரவுவதை நுண்ணுணர்வுடன் காணலாம். மேலும் அந்நிலையில் அம்-மனிதன் சிவனின் இயல்பில் நிலைபெறுகிறான். சக்தியாக வெளிப்படும் அவனது முகமே சிவனின் முகமாகிறது; நாசித் துவாரங்கள் பிராண சக்தி நுழையும் தெய்வீக வாயில்களாக உணரப்படுகின்றன.
யோகிகள் இந்த இரகசியத்தை உணர்ந்து, அனுபவித்து, தமது பிராண சக்தியை எப்போதும் நாபிக் கமலத்தில் குடிகொண்டிருக்கும் சிவத்துடன் ஒன்றச் செய்வதற்கான யோகத்தில் நிலைத்திருப்பதால், அவர்களின் முகம் இயற்கையாகவே தேஜஸ் நிறைந்ததாக விளங்குகிறது. அதனால், “சக்தியே சிவனின் முகம்” என்று ஆகமங்கள் கூறுகின்றன.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

