“தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை”

“தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை” என்ற அவ்வையாரின் வாக்கியம், ஒரு தாயின் கர்ப்பப்பையின் மகத்துவத்தை நினைவூட்டுகிறது. ஆலயக் கருவறையில் இறைவன் உறைவது போல, ஒவ்வொரு தாயின் கர்ப்பப்பையிலும் உயிர்கள் பத்து மாதங்கள் வாசம் செய்கிறது.  

‘தாயின் கர்ப்பமே சிறந்தொரு கோயில்’. என்ற இத்தத்துவத்திற்கு கிருஷ்ணரின் பிறப்பு ஒரு சான்று. பாகவத புராணத்தின்படி, கிருஷ்ணர் தற்செயலாக தேவகியைத் தாயாக அடையவில்லை. அதற்கு முந்தைய பிறவிகளில், தேவகியும் வசுதேவரும் (அன்றைய பெயர்கள்: சுதபா மற்றும் பிருஷ்ணி) கடும் தவம் புரிந்தனர். தங்களுக்கு மகனாகத் தர்மத்தின் நாயகனே பிறக்க வேண்டும் என்று அவர்கள் இறைவனிடம் வேண்டினர். அவர்களது பக்தியையும், தவத்தையும் கண்டு மகிழ்ந்த பகவான், “நிச்சயமாக, அடுத்தடுத்த மூன்று பிறவிகளில் நானே உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்” என்று வரமளித்தார். அதுபோன்றே அடுத்த பிறவியில் தேவகியாக  வசுதேவரின் மனைவியாகி,  பகவான் கண்ணனை தன் கர்ப்பத்தில் , கோயிலாக்கி ஈர்க்கும் அளவுக்குத்  தன்னுடைய மனதை ஒரு ‘தியான மையமாக’ (Meditation Center) மாற்றி இருந்தார்.

ஆனால் பொதுவாக சாதாரண உயிர்கள் தங்கள் முன் ஜென்ம வினையினால் (Past Deeds) ஒரு தாயின் கர்ப்பப்பைக்குள் தள்ளப்படுகிறார்கள். அதுபோன்றே அந்த சாதாரண தாயும், தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப அத்தகைய உயிர்களை தன் கர்ப்பத்தில் தாங்கிக் கொள்கிறாள். இது போன்ற தாய்களின் கர்ப்பவாசங்கள்  ஒருபோதும் சிறந்ததொரு கோயிலாக மாறாது.

ஆனால், கிருஷ்ணர் தனது விருப்பத்தால் தேவகியின் கருவுக்குள் புகுந்தார். எப்போது ஒரு தாய் ஓர் குழந்தை உருவாகும் முன்பே தனது கருப்பையை தெய்வத்தின் இருப்பிடமாக மாற்றுகிறாளோ, அப்போது அதற்கேற்றால்போல் தெய்வ சம்பத்து கொண்ட  உயிரும் தேடி வந்து அங்கு குடி கொள்கிறது. தேவகி அந்தத் தாயின் நிலையைத் தன் பக்தியால் அடைந்திருந்தார்.

“கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்” என்பதும் ஓர் உலக நீதி செய்யுள். அதாவது “கோயிலாக விளங்க வேண்டிய இத்தகைய கர்ப்பவாசத்தின் பெருமையை உணராத பெண்களின் கர்ப்பத்தில், தெய்வ ஸம்பத் உடைய உயிரானது அங்கு சென்று குடி இருக்க வேண்டாம்”

இதையும் கிருஷ்ணரின் பிறப்போடு இணைத்துப் பார்த்தால், எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! கிருஷ்ணர், வசுதேவரின் மனைவியான தேவகி  போன்ற தூய்மையான பக்தையின் கர்ப்பத்தை மட்டுமே ‘தேர்ந்தெடுத்தார்’. ஒருவேளை அந்தத் தாய் தன் பொறுப்பை உணராமல் இருந்திருந்தால், பகவான் அங்கு தோன்றியிருக்க மாட்டார்.

தாயாகப் போகும் ஒரு பெண், தன் உடலையும் மனதையும் தூய்மையுடனும், அன்புடனும், இறைநினைவுடனும் பேணி, தன் கர்ப்பத்தை ஒரு கோயிலாகக் கருதி வாழ்ந்தால், உயர்ந்த பண்புகள் கொண்ட உயிர் தேடி வந்து குழந்தையாக பிறக்கும் சூழல் உருவாகும். இதுவே தேவகியின் வரலாறு நமக்குக் கற்றுத் தரும் ஆன்மிகப் பாடமாகும்.”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment