தூய உணர்வு என்றால் என்ன?

தூய உணர்வு என்றால் என்ன?
“தூய உணர்வு” என்பது தனித்து உணரக்கூடிய ஓர் பொருளோ அல்லது குறிப்பிட்ட ஓர் அனுபவமோ அல்ல. மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில்,
“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே”
என்று உரைத்தபடி, அது எங்கும், எல்லாவற்றிலும், நீக்கமற வியாபித்திருக்கும் பேருண்மை ஆகும்.

இப்பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று நவீன அறிவியல் கூறுகிறது. அதேபோல் திரு அருட்பிரகாச வள்ளலார் தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
“எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்து
மேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”
என்று பாடுகிறார். சிவஜோதியைத் தம்முள் அனுபவித்த பின்னர், அதன் எல்லையற்ற வியாபகத்தை — பிரபஞ்ச எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட பரவலை — அவர் உணர்ந்து எடுத்துரைக்கிறார்.

ஆகவே, தூய உணர்வு என்பது தனித்து உணரக்கூடிய ஒரு தனிப்பட்ட உணர்வு அல்ல என்பதை ஒருவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது, அந்தப் பேருணர்வு மெய், வாய், கண், செவி, நாசி என்னும் ஐம்புலன்களிலும்; உடல் உணர்வு, வாக்கு, பார்வை, கேட்டல், நுகர்தல் என்னும் ஐம்பொறிகளிலும்; பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்னும் ஐந்து வகைப் பிராண சக்திகளிலும்; மேலும் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அனைத்திலும் வியாபித்திருப்பதை உணர முடியும்.

மேலும், வள்ளலார் மற்றொரு இடத்தில்,
“காட்சியும் கானாக் காட்சியும் அது தரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”
என்று கூறுகிறார். காணப்படும் அனைத்து காட்சிகளிலும் அந்தத் தூய உணர்வின் வியாபகத்தை உணரும்போது, அதுவே காட்சியாக அறியப்படாத சாட்சியாகவும், அந்தர்யாமியாகவும் ஒவ்வொருவருள்ளும் இருந்து அனைத்தையும் இயக்கும் பேராற்றலாக விளங்குவதை உணரலாம்.

இவ்வாறு அனுபவிக்கப்படும் தூய உணர்வில், ஐம்புலன்கள், ஐம்பொறிகள், ஐந்து பிராணங்கள், மனம், புத்தி, அகங்காரம் மற்றும் காட்சிகள் ஆகியவற்றுக்குரிய தனித்த அடையாளங்களும் சுட்டுதல்களும் மறைந்து விடுகின்றன. அப்போது தூய உணர்வு ஒன்றே எஞ்சியிருக்கும். அந்த நிலையே முக்தி நிலை, சிவானுபவ நிலை, அல்லது பேரொளி உணர்வு நிலை என்று கூறலாம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment