“தீர்ப்பிடாதீர்கள்”

ஒருவரின் வாழ்க்கை முடியும் வரை அதை மதிப்பிட முடியாது, ஏனெனில் தீமையாகத் தொடங்குவது நன்மையாக முடியலாம் என்பது சுபி ஞானி ஹஜ்ரத் ரூமின் கூற்று.

இதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் வரும்-அஜாமிலன் சரித்திரத்தை உவமானமாக எடுத்துக் கொள்ளலாம்.
அஜாமிலன் முதலில் நல்லொழுக்கம் மிக்க, வேதம் கற்ற ஒரு பிராமணராக இருந்தான். ஒருநாள் ஒரு தாசியுடன் ஏற்பட்ட தொடர்பினால் தவறான வாழ்க்கையில் ஈடுபட்டான். அதன் பிறகு தர்மத்தை விட்டுவிட்டு, திருட்டு, பொய், ஏமாற்றுதல் போன்ற செயல்களால் குடும்பத்தை நடத்தினான்.

அவனுக்கு பல பிள்ளைகள் பிறந்தனர். கடைசியாகப் பிறந்த மகனுக்கு நாராயணன் என்று பெயர் வைத்தான். வயதான காலத்தில் அஜாமிலன் அந்த மகன் மீது மிகுந்த பாசம் கொண்டு, எப்போதும் “நாராயணா! நாராயணா!” என்று அவனை அழைத்துக்கொண்டே இருந்தான். இறக்கும் தருவாயில், பயத்தில் தனது மகனை அழைக்க “நாராயணா!” என்று கூப்பிட்டான். அந்த நாமஸ்மரணையின் பலனால், அவனது உயிரைக் கொண்டு செல்ல வந்த யமதூதர்களைத் தடுத்து, விஷ்ணுதூதர்கள் வந்தனர்.

அவர்கள், பகவானின் திருநாமத்தை உச்சரித்ததால் அஜாமிலனின் பாவங்கள் நீங்கிவிட்டன என்று விளக்கினர். இதனால் அஜாமிலன் உயிர் பிழைத்து, பின்னர் உண்மையான பக்தி மற்றும் தவ வாழ்க்கையை மேற்கொண்டான். இறுதியில் பகவானின் அருளால் முக்தி அடைந்தான்.

அஜாமிலன் கதையின் நோக்கம் “தவறு செய்து கொண்டே இருந்தாலும் பரவாயில்லை” என்பதல்ல; மாறாக “எவ்வளவு தூரம் வீழ்ந்திருந்தாலும், திரும்பி எழுவதற்கான வாயில் எப்போதும் திறந்தே இருக்கிறது” என்பதே.

எவ்வாறு தீமையில் தொடங்கிய அஜாமிலனின் வாழ்க்கை இறுதியில் நன்மையாக முடிந்ததோ, அவ்வாறே ஒருவர் எவ்வளவு தீயவனாக வாழ்ந்தாலும் அவரை மதிப்பீடுவதற்கு இறைவன் அல்லது ஸ்த்குருவை தவிர எவருக்கும் உரிமை இல்லை. ஏனெனில் தீயவனாக தொடங்கிய அவன் வாழ்க்கை முடியும் தருவாயில், இறை அல்லது குருவருள் கூடின், அக்கணமே அது நன்மையில் முடியலாம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment