“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
தேவர்கள் பலர் உள்ளனர் என்ற மாறுபட்ட நம்பிக்கைகளே, ஒன்றாய் இருக்க வேண்டிய மனிதகுலம் தனித்தனி பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பதற்கான முக்கிய காரணமாகின்றன. ஒவ்வொரு தேவருக்கும் ஒவ்வொரு தனி மதம் என்ற எண்ணம் உருவாகி, கண்களுக்கு புலனாகாத அந்தத் தேவர்களின் பெயரில் மனிதர்கள் தங்களுக்குள் தாங்களே வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டு அமைதியின்றி வாழ்கின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் மரபில் தோன்றிய திருமூலர் இதற்கான ஓர் உபாயத்தை தமது உரையின் மூலம் நமக்கு வழங்கியுள்ளார்:
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே”
இதன் ஆழமான பொருள் என்னவெனில், ஒவ்வொரு மனிதனும் “நான் ஆறறிவு கொண்ட அரிய மனிதப் பிறவி” என்று உணர்வதற்குக் காரணமாக இருப்பதே திருமூலர் கூறும் “ஒருவனே தேவன்” என்ற தூய விழிப்புணர்வாகும் (Pure Consciousness).

அத்தூய விழிப்புணர்வு அன்றி வேறொன்றுமில்லை. அது கண்களால் காணப்படும் ஒரு பொருள் அல்ல. ஒவ்வொரு மனிதனின் ஆழமான உள்மூச்சுக்கும் வெளிமூச்சுக்கும் இடையில் அமைதியாக இருக்கும் பூரண பொருளே அது. ஒரு கணம் மூச்சு அங்கு இயல்பாக நின்றுவிடும் அந்த அமைதித் தருணத்தில், மனமும் தன்னிச்சையாக அமைதியடைகிறது. அங்கு எண்ணங்களில்லை; அசைவில்லை; கடந்த காலமோ எதிர்காலமோ இல்லை. தூய விழிப்புணர்வு மட்டுமே ஒளியுணர்வாக தனக்குத் தானே ஒளிர்கிறது. உருவமற்ற அந்தத் தூய உணர்வே ஒவ்வொருவரின் உண்மையான தேவனும் ஆகும்.

  1. ஆதி சங்கரர் இந்த உருவமற்ற தூய உணர்வையே ஜோதிர் பிரம்மம், நிர்குணப் பிரம்மம், ஏகாத்மா என்று குறிப்பிடுகிறார்.
  2. “லா இலாஹ இல்லல்லாஹ்” (لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ) என்பது இஸ்லாத்தின் அடிப்படை கலிமா ஆகும். இதன் பொருள்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.” இது வெறும் வார்த்தை உச்சரிப்பு மட்டுமல்ல. தனிநபர் அகங்காரம், உலகப் பற்றுகள், மற்றும் அனைத்து சார்புகளும் கரைந்த பின் நிலைத்திருப்பது உருவமற்ற அல்லாஹ்வின் தெய்வீக ஒளி (நூர்) மட்டுமே என்ற உள்அனுபவ உண்மையை உணர்வதாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த நிலையில் “நான்” என்ற தனி உணர்வு மங்குகிறது; உலக ஆதாரங்கள் அனைத்தும் நிலையற்றவை என்பது தெளிவாகிறது; “தூய உணர்வாக விளங்கும் அல்லாஹ்வின் நூரே உண்மை” என்ற அனுபவ ஞானம் உதயமாகிறது.
  3. கிறிஸ்துவத்தில், இத்தூய உணர்வே “வார்த்தை” எனக் குறிக்கப்படுகிறது. “ஆதியில் வார்த்தை இருந்தது” என்று பைபிள் தொடங்குகிறது. அதுபோல “நானே உலகின் ஒளி” (யோவான் 8:12) என்ற இயேசு கிறிஸ்து அவர்களின் கூற்றும், உள்ளார்ந்த தெய்வீக ஒளியை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.
  4. பௌத்தத்தின் முக்கியப் பிரிவான மகாயானத்தில், இத்தூய உணர்வு “சூன்யம்” அல்லது “ஒன்றுமில்லாதது” போல விவரிக்கப்படினும், அதுவே எல்லாவற்றையும் உள்ளடக்கிய பேரறிவும் விழிப்புணர்வுமாக உள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.

ஆக, மனிதர்கள் கற்பிக்கப்பட்ட மதங்களால் பிளவுபட்டிருந்தாலும், திருமூலர் குறிப்பிடும் இத்தூய உணர்வே “ஒருவனே தேவன்” என்பதற்கான உண்மைப் பொருளாக, எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒரே தெய்வீக அடிப்படையாக விளங்குகிறது.

மத அடையாளங்களில் ஆழமாக பற்றுணர்ந்து வாழும் மனிதர்களிடையே, எப்போது ஒவ்வொருவரின் உள்ளும் விளங்கி கொண்டிருக்கும் “தேவன் ஒருவனே” என்ற தூய உணர்வு உணரப்படுகிறதோ, அப்போது தான் மனிதகுலம் “ஒன்றே குலம்” என்பதை உண்மையாக உணர முடியும்.
மேலும், அழிவற்ற தூய விழிப்புணர்வை உணர்ந்த அந்நிலையில், ஒவ்வொரு மனிதனும் தன் தெய்வீக இயல்பை உணர முடியும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment