ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“புகுந்து நின்றான் வெளியாய், இருள் ஆகிப்
புகுந்து நின்றான் புகழ் வாய், இகழ்வு ஆகிப்
பகுந்து நின்றான் உடலாய், உயிர் ஆகிப்
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.”
புகுந்து நின்றான் வெளியாய், இருள் ஆகி:
புகுந்து: ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் ஓர் விந்தணுவாக புகும் முன்னரே, ஆணின் விந்தணுக்களுக்குள் புகுந்து, அவ்வாறு அந்த ஆணிடம் விந்தணுக்கள் உருவாகும் முன்னரே அவனிடம் உள்ள இரத்த அணுக்களுக்குள் புகுந்து, இரத்த அணுக்கள் உருவாகும் முன்னரே அவன் உண்ணும் உணவுக்குள் புகுந்து, உணவு உற்பத்தியாகும் முன்னரே மழை நீருக்குள் புகுந்து, மழை நீருக்கும் முன்னரே நீராவியுனுள் புகுந்து, நீராவிற்கும் முன்னரே சூரிய ஒளியின் வெப்பத்தினுள் புகுந்து, அந்த சூரிய ஒளி உருவாகும் முன்னரே அது நிலைபெற்றிருக்கும், வெளியுனுள் புகுந்து, வானாகி நின்றவன், ஒரு பெண்ணின் ‘இருள்’ சூழ்ந்த கர்ப்பப்பைக்குள் ஓர் அணுவாகிப் புகுந்து இருளாகி…
புகுந்து நின்றான் புகழ் வாய், இகழ்வு ஆகி:
இவ்வாறு ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாக வானாகி நிற்கும் ‘புகழை’ உடையவன், ஓர் மானுட பிறவிக்குள் இருளாகி புகுந்து , அதன் மூலம் தன்னைத்தானே சுருக்கிக் கொண்டதால் (Self-Limitation) ‘இகழ்வாகி’…
பகுந்து நின்றான் உடலாய், உயிர் ஆகி:
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி என்று மாணிக்கவாசக பெருமான் தன் திருவாசகத்தில் உரைத்தபடி, வானாகி நின்றவன் ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் ஓர் அணுவாய் புகுந்து இருளாகி, இகழ்வாகி நின்றவன், பகுந்து ஓர் உடலாய் உயிராய் ஆகி…

புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.
புந்தி: என்பதற்கு அறிவு என்றும், மன்னி: என்பதற்கு பொருந்துதல் என்றும் பொருள் உள்ளது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதியாய், எங்கும் நிறைந்த பேரறிவாளனாக விளங்கும் அவன், இம்மானுட உடம்பினுள் குடி கொண்டுள்ள ஆறறிவுக்குள் அறிவாய் பொருந்தி புகுந்து நின்றானை என்சொல்லி வாழ்த்துவனே!
திருச்சிற்றம்பலம் 🙏

