தெளிவு எவ்வாறு எல்லா யோகமாகவும் ஆகின்றது? திருமந்திரக் குரு உபதேச ரகசியம்!

தெளிவு எவ்வாறு எல்லா யோகமாகவும் ஆகின்றது? திருமந்திரக் குரு உபதேச ரகசியம்!

ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்களுக்கு பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம் எனப் பலவிதமான யோக மார்க்கங்கள் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தும் தனித்தனியான பாதைகளா? அல்லது ஒரே புள்ளியில் இணையும் தொடர் சங்கிலிகளா?

“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே!”

என்ற திருமூலரின் புகழ்பெற்ற திருமந்திரப் பாடல் இதற்கு எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதைக் என் குரு உபதேசத்தின் வழியே சற்று ஆழமாகப் பார்ப்போம்.

பொதுவாக இப்பாடலை முதல் வரியிலிருந்து தொடங்கி விளக்குவது வழக்கம். ஆனால், இதன் சூட்சுமத்தை முழுமையாக உணர, இப்பாடலின் கடைசி வரியிலிருந்து மேல் நோக்கிப் பயணிப்போம்.

  1. பூரணத் தெளிவின் தொடக்கம்: “தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே”
    இது இத்திருமந்திரப் பாடலின் இறுதி வரி. எல்லா யோகங்களுக்கும் அடித்தளமான முதல் படி இங்கிருந்துதான் தொடங்குகிறது. குரு வேறு, தான் வேறு என்ற இருமை நிலை மாறி, ஒருவர் தன்னையே குருவின் உருவாக இடைவிடாது சிந்திக்கும் போதுதான் அவருக்குள் ‘பூரணத் தெளிவு’ பிறக்கிறது.
  2. ஞான யோகம்: “தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்”
    தன்னையே குருவாகச் சிந்தித்த அந்தப் பூரணத் தெளிவிலிருந்து, நமக்குள்ளேயே ஒரு நுண்ணிய வார்த்தை (உள் ஒலி / நாதம்) வெளிப்படும். அவ்வாறு தம்முள் இருந்து வெளிப்படும் அந்த வார்த்தையை, குருவின் திருவார்த்தையாகவே எண்ணி அகச்செவியால் கேட்கும்போது, ஏற்கனவே ஏற்பட்ட தெளிவிலிருந்து மற்றொரு புதிய தெளிவு பிறக்கிறது. இந்தத் தெளிவே ஞான யோகமாக மலர்கிறது.
  3. கர்ம யோகம்: “தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்”
    உள்ளிருந்து வெளிப்பட்ட குருவின் திருவார்த்தையைக் கேட்டதால் சித்தித்த ஞான யோகத்தின் வழியே அடுத்த நிலை விரிகிறது. கேட்ட அந்தத் திருவார்த்தையையே குருவின் திருநாமமாக, அதாவது மந்திரமாக எண்ணி, நம் மூச்சின் வழியே இடைவிடாது ‘அஜபா ஜெபமாக’ (உதடு அசையாது சுவாசத்தோடு இணையும் ஜெபமாக) செய்து கொண்டே இருக்க வேண்டும். உயிர் இயங்கும் மூச்சையே மந்திரச் செயலாக மாற்றும்போது, முந்தைய தெளிவிலிருந்து மறுபடியும் பிறக்கும் தெளிவானது கர்ம யோகமாக உருமாறுகிறது.
  4. தியான யோகம்: “தெளிவு குருவின் திருமேனி காண்டல்”
    இடைவிடாத அஜபா ஜெபம் எனும் கர்ம யோகத்தின் பலனாக என்ன நிகழ்கிறது? திருமந்திரத்தின் முதல் வரி இதற்கு விடையளிக்கிறது. நம்முள்ளிருந்து வெளிப்பட்ட குருவின் தெய்வத்தன்மை பொருந்திய திருமேனியை (அருள் ஒளியை), நம் புறக்கண்களாலேயே நேராகக் கண்டறியும் நிலை கைகூடும். அவ்வாறு காணும்போது, முந்தைய தெளிவுகளிலிருந்து மறுபடியும் ஏற்படும் தெளிவானது தியான யோகமாக உருமாறுகிறது.

யோகங்களின் உச்சக்கட்டப் பரிணாமம்:
இந்த நான்கு நிலைகளுக்குப் பிறகு, குருவருளால் விளைந்த அந்த பூரண தெளிவானது ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொடர்ந்து பரிணமிக்கிறது:

பக்தி யோகம்: குருவின் திருமேனியைக் கண்ட தியான யோகத்திலிருந்து உண்மையான பேரன்பு எனும் பக்தி பிறந்து, அது பக்தி யோகமாக உருமாறுகிறது.

ஞானகர்மசந்நியாச யோகம்: அந்த முதிர்ந்த பக்தி யோகத்திலிருந்து பற்றற்ற நிலையான சந்நியாசம் பிறந்து, அது ஞானகர்மசந்நியாச யோகமாக உருமாறுகிறது.

ராஜ யோகம்: ஞானகர்மசந்நியாச யோகம் கைவரப்பெற்ற ஒருவருக்கே, இது உயிரைப் பணயம் வைத்துச் செய்யக்கூடிய உச்சக்கட்ட ராஜ யோகமாக (வாசி யோகமாக) உருமாறுகிறது.

முக்தி யோகம் (அழியாப் பெருநிலை): இறுதியாக, அந்த ராஜ யோகமானது முக்தி யோகமாக உருமாறி, குருவருளால் ஏற்பட்ட தொடர் தெளிவுகளின் பயனாக ‘அழியாப் பெருநிலை’ என்னும் பெரும் பேற்றில் கொண்டு சேர்க்கிறது.

திருமந்திர உரையின் சாராம்சம்
திருமூலரின் இந்தத் திருமந்திர உரை நமக்கு உணர்த்தும் பேருண்மை இதுதான்:
முக்தியை நாடுபவர்களுக்குத் தனித்தனியாகப் பல யோகங்கள் உண்டு என்று இங்கே பிரிக்கப்படவில்லை. மாறாக, ஒருவருக்குக் குருவருள் கைகூடித் தெளிவு பிறக்கும்போது, சகல யோகங்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தாமே மலர்ந்து, இறுதியில் அத்தகைய சாதகருக்குள் அனைத்து யோகங்களும் ஒரே யோகமாக ஒடுங்கி நிற்கும்!
திருச்சிற்றம்பலம் 🙏

One response to “தெளிவு எவ்வாறு எல்லா யோகமாகவும் ஆகின்றது? திருமந்திரக் குரு உபதேச ரகசியம்!”

  1. தெளிவு குருவின் திருமேனி காண்டல் = முர்ஷித்தின் திருநோக்கு (Nazar) சூபித்துவத்தில் ஆன்மீக குருவை ‘முர்ஷித்’ (Murshid) அல்லது ‘பீர்’ (Peer) என்பர். ஒரு முர்ஷித்தின் அருள் பார்வை சீடனின் மீது படுவதை ‘நஸர்’ (Nazar) என்பார்கள். முர்ஷித்தின் ஆன்மீக ஒளியும் தெய்வீகப் பார்வையும் சீடனின் இதயத்தில் உள்ள ஆன்மீக இருளை நீக்கி, இறைவனைப் பற்றிய மெய்ஞ்ஞானத் தெளிவை (மஃரிபா – Ma’rifah) உண்டாக்கும்.2. தெளிவு குருவின் திருநாமம் செப்பல் = சூபித்துவத்தில் குருமார்களின் ஆன்மீகத் தொடர் வரிசையை ‘சில்சிலா’ (Silsilah) என்பர். சீடர்கள் தங்களது ‘திக்ரு’ (Zikr – இறை தியானம்) மற்றும் பிரார்த்தனைகளின் போது, தங்களது முர்ஷித் மற்றும் அவர்களின் குருமார்களின் பெயர்களை (சில்சிலா வழி) நினைவுகூர்ந்து ஓதுவார்கள். இது குருவின் ஆன்மீக ஆற்றலைத் தங்களுக்குள் கடத்த உதவும் வழிமுறையாகும்.3. தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் = சூபித்துவத்தில் குருவின் முன்னிலையில் அமர்ந்து அவரது ஞான உரைகளைக் கேட்பதை ‘ஸுஹ்பா’ (Suhbah – ஆன்மீகக் கூட்டுறவு) என்பர். முர்ஷித்தின் ஒவ்வொரு வார்த்தையும் சீடனின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் இறைச் செய்தியாகவே கருதப்படுகிறது. குருவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது (இத்தாஅத் – Itaa’at) சூபித்துவத்தின் முக்கிய விதியாகும்.4. தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே… சூபித்துவப் பயிற்சியில் இதனை ‘தஸவ்வுரே ஷேக்’ (Tasawwur-e-Sheikh) அல்லது குரு தியானம் என்பர். சீடன் தன் அகக்கண்ணால் தனது முர்ஷித்தின் உருவத்தை இதயத்தில் தியானிப்பதாகும். இதன் மூலம் சீடன் தன் முர்ஷித்தின் ஆன்மீகத் தன்மையோடு ஒன்றிணையும் ‘ஃபனா ஃபிஷ் ஷேக்’ (Fana fi-Sheikh) என்ற நிலையை அடைந்து, இறுதியில் இறைவனுடன் கலக்கும் ஆன்மீகப் பேரின்பத்தைப் பெறுவான்.

    Like

Leave a Reply