அன்பின் ரகசியம்: பிருஹதாரண்யக உபநிடதம் உணர்த்தும் ஏகாத்மா தத்துவம்:

அன்பின் ரகசியம்: பிருஹதாரண்யக உபநிடதம் உணர்த்தும் ஏகாத்மா தத்துவம்:
உபநிடதங்கள் மனித வாழ்வின் மிக உயர்ந்த தத்துவங்களை எளிய உரையாடல்கள் மூலம் நமக்கு விளக்குகின்றன. அவற்றில் மிக முக்கியமானதும், ஆழமானதுமான ஒரு உரையாடல் பிருஹதாரண்யக உபநிடதத்தில் (4:5.6) இடம்பெற்றுள்ளது.

ரிஷி யாக்யவல்க்கியர் தன் மனைவி மைத்ரேயிக்கு உபதேசிக்கும் இந்த வரிகள், உலகியல் அன்பை தாண்டி ஆத்மார்த்தமான ஒரு தேடலை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன.

“அன்பிற்குரியவளே, கணவன் நேசிக்கப்படுவது அவனுக்காக அல்ல; மாறாக, ஆன்மாவின் பொருட்டே கணவன் நேசிப்புக்கு உள்ளாகிறார். அன்பிற்குரியவளே, மனைவி நேசிக்கப்படுவது அவளுக்காக அல்ல; மாறாக, ஆன்மாவின் பொருட்டே மனைவி நேசிப்புக்கு உள்ளாகிறார்.”

நுண்ணிய இடைவெளியும் வேறுபாடுகளும்:
ஏகாத்மா தத்துவத்தின்படி நாம் அனைவருமே ஒரே ஆத்மாவினால் தான் தாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பின் ஏன் இந்த ‘நான்’, ‘நீ’ என்ற பேதங்கள்?
ஆத்மாவின் பண்பு ஒரு நுண்ணிய இடைவெளி கொண்டது. அந்த இடைவெளியின் பொருட்டே கணவன், மனைவி, உறவுகள் என்னும் வேறுபாடுகள் இங்கு உதயமாகின்றன. இந்த இருமைகளை (Duality) உணர்த்துவதுதான் இந்த உலக மாயை.

அன்பின் மூலம் கரையும் அடையாளங்கள்:
அன்பு என்பது வெறும் உணர்ச்சியல்ல, அது இருமைகளை இணைக்கும் ஒரு பாலம். மனைவி கணவனை நேசிப்பதன் மூலமாக அந்த நுண்ணிய இடைவெளியை நிரப்பி தனக்கும் கணவனுக்கும் உள்ள வேறுபாட்டை நீக்குகிறாள். வேறுபாடு முற்றிலும் நீங்கிய நிலையில், அங்கு கணவன் வெறும் கணவனாக இருப்பதில்லை.

எனவே, ஒருவன் கணவனாக தன் மனைவியால் நேசிக்கப்படுவது அவனுக்காக அல்ல; மாறாக, ஆன்மாவின் தன்மையான அந்த நுண்ணிய இடைவெளியின் பொருட்டே அவன் நேசிப்புக்கு உள்ளாகிறான். அந்த அத்வைத அன்பின் மூலம், அவன் ‘கணவன்’ என்ற தனித்த அடையாளத்தை இழக்கிறான்.
பிரபஞ்சம் முழுவதுக்கும் பொருந்தும் உண்மை:
இந்தத் தத்துவம் கணவன்-மனைவி என்ற உறவுக்கு மட்டுமல்ல, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் பொருந்தும்.

அவ்வாறே ஒரு கணவனுக்கு மனைவியும், பெற்றோர்களுக்கு மகன்களும், செல்வங்களும், கால்நடைகளும், சமூகத்தின் பல்வேறு பிரிவினரும், உலகங்களும், தேவர்களும், வேதங்களும், படைப்புக்களும் மற்றும் அனைத்தும் அவையவைகளுக்காக நேசிக்கப்படுவதில்லை. ஆத்மாவின் தன்மையான நுண்ணிய இடைவெளியின் பொருட்டே ஒவ்வொன்றும் நேசிக்கப்படுகின்றன.

அவ்வாறு முழுமையாக நேசிப்புக்கு உள்ளாவதின் மூலம், வேறுபாடுகள் மறைந்து போய் அவையவைகள் அதனதன் உலகியல் அடையாளங்களை இழக்கின்றன. அனைத்தும் ஒன்றே என்ற நிலை அங்கு பிறக்கிறது.

ஆத்மாவை அறிதல்:
எனவே நேசிப்புக்கு ஆதாரமான ஆத்மா (நுண்ணிய இடைவெளி) காணப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும், உணரப்பட வேண்டும், அறியப்பட வேண்டும்.
“ஓ மைத்ரேயி! ஆத்மாவின் நுண்ணிய இடைவெளியை கண்டு, கேட்டு, உணர்ந்து, அறிந்து கொண்டால், இவை அனைத்தும் அறியப்பட்டு, மறைந்து போகும்.”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment