நகரும் மனிதனுக்குள் நகராத தெய்வம்:

நகரும் மனிதனுக்குள் நகராத தெய்வம்:
“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே”
என்று மாணிக்கவாசகர் சுவாமிகள் தம் திருவாசகத்தில் உரைத்தபடி, இறைவனின் தன்மை என்பது நீக்கமற எங்கும் எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பது.

ஒரு பொருளின் தன்மையை உணர்ந்து அதை அணுகும் போது தான் அது முழுமை அடைகிறது. அதாவது நெருப்பு என்னும் பொருள் அதன் தன்மையான உஷ்ணத்தை அறிந்து அணுகுதல், காற்று என்னும் கண்களுக்கு புலனாகாத பொருள் அதன் தன்மையான ஸ்பரிசத்தை அறிந்து அணுகுதல் போன்று…

இறைவனை அவனின் தன்மையான  “போக்கிலன் வரவிலன்” அதாவது, போக்கும் வரவும் இல்லாதவன் என்பதை அறிந்து அவனை அணுகும் போது தான், அந்த அணுகுதல் என்பது முழுமை அடைகிறது. அதாவது ஒருவரிடம் இருந்து இறைவனை அணுக வேண்டும் என்ற எண்ணம் எழும் அக்கணத்திலேயே, இறைவனும் அணுகப்பட்டவனாக அக்கணத்திலேயே ஆகி விடுகிறான் என்பதே உண்மை.

இதுவே வணங்குபவனுக்கும் வணக்கத்திற்கு உரியவனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி இல்லாத தொடர்பு. இத்தொடர்பினை அறிந்து கொள்ளாமல், இறைவனை அவனது தன்மைக்கு மாறாக போகும் வரவும் மற்றும் அவனுக்கென தனி இருப்பிடத்தையும் கொண்டவனாக எண்ணி, அங்கும் இங்குமாய் சென்றுதான் அவனை அணுகி வழிபட முடியும் என்று எண்ணுவது…

ஒருவர் நெருப்பை கையில் வைத்துக்கொண்டு உஷ்ணத்தை தேடுவதுபோல், காற்று எங்கும் இருக்க அதன் ஸ்பரிசத்தை தேடுவது போன்றதாகும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏