உடம்பொடு உயிரிடை ..கொள்ளும்.. உறவும் நட்பும்… திருக்குறள்: 338

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
உடம்பொடு உயிரிடை ..கொள்ளும்.. உறவும் நட்பும்…
“குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.”
திருக்குறள் 338 — அறத்துப்பால் —அதிகாரம்: நிலையாமை..

வள்ளுவர் பெருமான், அரிதிலும் அரிதாகக் கிடைக்கப்பெற்ற இந்த மனித உடம்புக்கும், அதனுள் இயங்கும் உயிருக்கும் இடையிலான உறவைச் சுட்டிக்காட்டும்போது, “நட்பு” என்னும் புனிதமான சொல்லை ஏன் பயன்படுத்தி உள்ளார். ஏனெனில் நட்புதான் காதலாக மாறி உடல், உயிர் ஒன்றன உணரும் அத்வைத நிலை கிட்டும்…

ஓர் உடம்பும், உயிரும் மானுடப் பிறப்பாக தோன்றியதிலிருந்து ஒன்றாக இருக்கும் வரையில், அவற்றின் உறவு மிக நெருக்கமானது. ஆனால் அந்த உறவு நட்பாக மாறாதபோது, நிலையற்றது என்பதை வள்ளுவர், ஒரு பறவை முட்டையை உடைத்து வெளியேறி, அந்தக் கூடினைத் தனியே விட்டுப் பறந்து செல்வதற்கு

ஒப்பிடுகிறார்.
பஞ்சபூதங்களின் கலவையால் உருவான இந்த மானுட தேகம், ஐம்புலன்கள், ஐம்பொறிகள், மனம், புத்தி, பிராணன், அகங்காரம் ஆகியவற்றால் மட்டுமே அறியப்பட வேண்டிய ஒன்றல்ல.

அவற்றிற்கெல்லாம் ஆதாரமாக, உடம்பினுள் குடிகொண்டிருக்கும் உயிர்ச் சக்தியின் — ஆன்மாவின் — வெளிப்பாடாகவே இந்த உடம்பையும் அதன் இயக்கங்களையும், குருவருளால் ஒருவர் உணரத் தொடங்கும்போது, உடம்போடு உயிர் கொண்டுள்ள நிலையற்ற உறவு, நட்பாக மாறி, காதலாக நிலைபெறத் தொடங்குகிறது.

அப்போது உடம்பு வெறும் “நான்” என்று எண்ணப்படும் ஒரு பௌதிக பொருளாக இல்லாமல், உயிர் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்வதற்கு ஒரு ஆயுத எழுத்தாக விளங்கிக் கொண்டிருப்பது புரியத் தொடங்குகிறது.

அந்த உணர்வில்தான் உடம்புக்கும் உயிருக்கும் இடையிலான உறவு, வெறும் பௌதிகப் பந்தமாக இல்லாமல், தெய்வீக நட்பாக, காதலாக மலர்கிறது.

ஆனால் அந்த நட்பு அறியப்படாமல் போனால்?

ஒரு பறவை, தான் உருவாகக் காரணமாக இருந்த முட்டைக் கூட்டை வெற்றுக் கூடாக்கி, அதைத் தனியே விட்டுப் பறந்து செல்வதைப் போல…

உடம்போடு உயிர் கொண்டுள்ள உண்மையான உறவாகிய நட்பை அறியாத மனிதன், இந்தப் பிறவியில் தான் கொண்டு வந்த இந்த உடம்பை விட்டுப் பிரிந்து, மற்றொரு உடம்பின் உறவை நாடிச் செல்லும் பிறவிச் சுழற்சியில் தொடர்ந்து பயணிக்கிறான்.

இதனோடு ஒத்திசையும் திருமூலரின் திருமந்திர உரை: 2106, சொல்கிறது..
“இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.”
என்று…

வள்ளுவர், உடம்புக்கும் உயிருக்கும் இடையிலான தெய்வீக நட்பு,  அறியாமையால் நிலையாமையாக மாறுவதை சுட்டிக்காட்டுகிறார்.

திருமூலர், இந்த உடம்பு எவ்வாறு நமக்கு வந்தது என்பதை ஆராய்ந்து, மீண்டும் ஒரு உடம்பைத் தேடிப் பிறக்காத வழியை நாடுமாறு அழைக்கிறார்.

இருவரின் குரலும் ஒரே இறப்பில்லாப் பெருவாழ்வை நோக்கிச் செல்கிறது:

உடம்பை அறிதல் மட்டும் போதாது;
உடம்பினுள் குடி கொண்டுள்ள உயிரையும் சேர்த்து அறிதல் வேண்டும்.

உயிரை அறிதல் மட்டும் போதாது;
உயிரின் ஆதாரமான தூய விழிப்புணர்வையும் சேர்த்து அறிதல் வேண்டும்.

அந்த தூய விழிப்புணர்வே…
உடம்பிற்கும் உயிருக்கும் இடையில் உள்ள உறவை நட்பாக்கி,
நட்பை, அழியாத காதலாக்கி, விடுதலையாக்குகிறது.
வாழ்க தமிழ்!🙏 வாழ்க வள்ளுவம்!🙏

Leave a comment