
விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலரின் திருமந்திர உரை எண்: 270..
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே”
ஹாஃபிஸ் என்ற புகழ்பெற்ற ஈரானிய சுபி ஞானி கூறுகிறார்: “நான் ஒருமுறை ஒரு பறவையிடம், ‘இந்த இருளின் ஈர்ப்பு விசையில் நீ எப்படிப் பறக்கிறாய்?’ என்று கேட்டேன். அதற்கு அது, ‘அன்பு என்னை உயர்த்துகிறது’ என்று பதிலளித்தது.”
ஒவ்வொருவரின் உறக்க நிலையில் வெளிப்படும் ஆழ்ந்த நித்திரை என்பது முற்றிலும் காரிருளின் ஈர்ப்பு விசையால் சூழ்ந்தது.
“உறங்குவதுபோலுஞ் சாக்காடு” என்று இத்தகைய உறக்க நிலையை மரணத்துடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர்
பெருமான்.
அதாவது தன் இருப்பைப் பற்றிய உணர்வே இல்லாத தருணம் அது. எனினும் மரணத்திற்கு ஒப்பான அந்த இருளின் ஈர்ப்பு விசையிலும் பயமற்ற ஆழ்ந்த அமைதியை, நித்திரை கொள்பவருக்கு அளித்தருள்வது… திருமூலரின் திருமந்திரம் கூறும்..
ஒவ்வொருவர் உள்ளும் சிவமயமாகவே அமர்ந்திருக்கும் அன்பே..
அவ் அன்பினாலேயே அந்த இருளின் ஈர்ப்பு விசையிலும், பறவைகளைப் போன்று, ஆழ்ந்த அமைதியை ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் உறக்கத்தில் தினந்தோறும் அனுபவிக்கின்றனர்.
ஒவ்வொருவரின் விழிப்பு நிலை என்பதும் மாயை என்னும் இருளில் ஈர்ப்பு விசையால் சூழ்ந்தது. எனவே ஒருவர் “அன்பே சிவமாக” தம்முள் உறக்க நிலையில் அமர்ந்திருந்ததை, தம் விழிப்பு நிலையிலும், பறவைகளைப் போன்று தொடர்ந்து உணரத் தொடங்கும் போது…
உறக்க நிலையில் அவர்கள் அனுபவித்த அதே ஆழ்ந்த அமைதி, மாயை என்னும் இருளில் ஈர்ப்பு விசையால் சூழப்பட்டுள்ள அந்த விழிப்பு நிலையிலேயும் தொடர்கிறது. இதை குரு அருளால் இவ்வாறு அறிந்தவர்களுக்கே “அன்பும் சிவமும் இரண்ட ல்ல” என்னும் ஞானம்.. தூய விழிப்புணர்வின் நிலையான தன்மையாக, அன்பின் அருளால் கிட்டுகிறது..
“உறக்கத்திலும்,விழிப்பிலும் முறைமை வகிப்பவனுடைய யோகம் துன்பத்தை (வினையை திருவினையாக்கி) துடைப்பதாகிறது “ என்று கீதை இம்முயற்சியை யோகம் என்றே குறிபிடுகிறது.
அவ்வாறு “அன்பே சிவமாய்” தம்முள் அமர்ந்திருப்பதை, தம் உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமையாக அறிய இயலாதவர்களுக்கு..
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.”
என்னும் வள்ளுவர் பெருமானின் திருக்குறளுக்கு ஏற்ப,
உறக்கத்தில் இறப்பதும், மீண்டும் விழிப்பில் பிறப்பதும் போன்ற நிலையாமையில் சிக்கி அமைதி இழந்து தவிப்பார்கள்.
திருச்சிற்றம்பலம் 🙏

