“ஆர்வத்தின் கோளாறு”

“ஆர்வத்தின் கோளாறு”
பொதுவாக, எல்லா மனிதர்களிடமும் ஆர்வம் என்பது இயல்பாகவே குடிகொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஆர்வத்தால் ஒன்றையே பற்றிக்கொண்டு நிரந்தரமாக இருக்க இயலாது. ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து மாறி மாறி அலைவதே ஆர்வத்தின் இயல்பு.

உண்மையில், ஒருவரது விழிப்புணர்வின் சக்தியே ஆர்வமாக வெளிப்படுகிறது.

ஆனால் இங்கேதான் ஆர்வத்தின் கோளாறு தொடங்குகிறது.
உருவமற்ற தன்மையில் விளங்கும் தம் சொந்த விழிப்புணர்வை அறியும் அறிவில் ஆர்வம் திரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, அதே விழிப்புணர்வின் சக்தியால் வெளிப்படும் காட்சிகள், பொருள்கள், அனுபவங்கள் ஆகியவற்றில் சிக்கிக்கொள்கிறது.

ஒரு காட்சி தோன்றுகிறது—ஆர்வம் அதைப் பற்றிக்கொள்கிறது. பின்னர் மற்றொரு காட்சி தோன்றுகிறது—அதற்குத் தாவுகிறது. அதன்பின் இன்னொன்று…

இவ்வாறு ஒரு காட்சியின் பின்னால் மற்றொரு காட்சி என்று தொடர்ந்து அலைந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எந்தக் காட்சியும் அதற்கு நிரந்தரமான திருப்தியை அளிப்பதில்லை. ஏன்?

ஏனெனில் ஆர்வம் தேடிக்கொண்டிருப்பது உண்மையில் காட்சியை அல்ல; தன் சொந்த மூலத்தையே.

விழிப்புணர்வின் சக்தியாக வெளிப்பட்ட ஆர்வம், தன்னை வெளிப்படுத்திய காட்சிகளுக்குள் சிக்கிக்கொண்டு, தன்னைப் பிறப்பித்த மூல விழிப்புணர்வை நோக்கித் திரும்ப மறந்துவிட்டது.

அதனால், காட்சிகளின் எண்ணற்ற மாற்றங்களுக்குப் பின்னால் அலைந்து திரிவதற்குப் பதிலாக,
“இந்தக் காட்சியை அறிந்து கொண்டிருப்பது யார்?” என்று ஆர்வத்தை அதன் மூலத்தை நோக்கித் திருப்பினால்…

அங்கே காட்சிகள் மாறிக்கொண்டிருந்தாலும், அவற்றை அறிந்துகொண்டிருக்கும் விழிப்புணர்வு மாறாமல் இருப்பதை அறியலாம். அந்தத் தருணத்தில்தான் ஆர்வம் வெளிப்பொருளைத் தேடும் இயக்கமாக இல்லாமல், தன் மூலத்தை அறியும் அறிவாக மாறுகிறது.

உண்மையில், ஆர்வத்தின் கோளாற்றால் தன் மூலத்தை அறிந்து, அதனுடன் மீண்டும் ஒன்றிணையும் இந்த அரிய வாய்ப்பையே ஒவ்வொரு மனிதனும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறான்.

ஆர்வத்தை அழிக்க முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. சத்குருவின் மீது தங்கள் பக்தி மற்றும் சேவையின் மூலம் ஆர்வத்தை வளர்ப்பதன் வழியாக, ஆர்வத்தின் திரிபைச் சரிசெய்ய முடியும், மேலும் குருவின் அருளால், ஆர்வத்தை அதன் மூலத்தை நோக்கித் திருப்ப முடியும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment