திருமூலரின் திருமந்திரம்: உரை எண்: 2027

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலரின் திருமந்திரம் — உரை எண்: 2027
“ஒன்று இரண்டாகி நின்று ஒன்றி ஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்று இரண்டு என்றே உரை தரு வோர்க்கெலாம்
ஒன்று இரணடாய் நிற்கும் ஒன்றோடு ஒன் றானதே.”

ஒன்று இரண்டாகி நின்று ஒன்றி ஒன் றாயினோர்க்கு:
கடலில் இருந்து அலை வேறானதாக, ஒன்று இரண்டாகத் தோன்றி நின்றாலும், இரண்டிற்கும் பொதுவானதாக இருக்கும் நீரின் தன்மையில் ஒன்றிப்போகும்போது, எவ்வாறு கடலும் அலையும் நாமரூபங்களைக் கடந்து ஒன்றாகின்றனவோ,
அவ்வாறே, அண்டத்தில் இருந்து பிண்டம் வேறானதாக, ஒன்று இரண்டாகத் தோன்றி நின்றாலும், இரண்டிற்கும் பொதுவானதாக இருக்கும் பரவெளி எனும் விழிப்புணர்வின் சர்வ வியாபக தன்மையை அறிந்துணர்ந்து , அதில் ஒன்றிப்போய் ஒன்றாயினோர்க்கு…

ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா:
“ஒன்று” என்பது “இரண்டின் எதிர்மறை” அல்ல; இரண்டாகத் தோன்றுவதற்கே ஆதாரமானது.
அதுபோல, ஒன்றாய் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்த பரவெளி, அண்டம்–பிண்டம் என்னும் இரு வேறுபட்ட தோற்றங்களுக்கு ஆதாரமாக விளங்கினாலும், அந்த ஒன்றும் இரண்டும் தனித்தனி பொருட்களாக ஒருபோதும் கூடுவதில்லை.
ஏனெனில், இரண்டாகத் தோன்றுவது நாமரூபத்தால்; ஒன்றாய் இருப்பது அதன் ஆதாரத் தன்மையால்.

ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கெலாம்:
மாறாக, “ஒன்று, இரண்டு” என்ற வேறுபாட்டையே உண்மை என நம்பி,
கடலும் அலையும் வெவ்வேறே,
அண்டமும் பிண்டமும் வெவ்வேறே,
என்று வாதிடுவோருக்கெல்லாம்…

ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்றானதே:
கடலின் தன்மையான நீரில் இருந்து உருவான அலைகள் கடலில் இருந்து வேறானதாக தோன்றினாலும் உண்மையில் கடலோடு ஒன்றானதே!
அது போன்று அண்டத்தின் அம்சமான பஞ்சபூதங்களில் உறையும் விழிப்புணர்வு சக்தியால் உருவான பிண்டம், அண்டத்திலிருந்து வேறானதாகத் தோன்றினாலும், உண்மையில் அண்டத்தோடு ஒன்றானதே!
எனினும் எவ்வாறு நீரின் தன்மை மறக்கப்பட்டு, நாமரூபங்களின்  வழியே கடலும் அலையும் ஒன்று–இரண்டாகத் தோன்றுகின்றனவோ,
அவ்வாறே, பரவெளி எனும் விழிப்புணர்வின் சர்வ வியாபக தன்மை உணரப்படாததின் காரணம், நாம ரூபங்களின் வழியே அண்டமும் பிண்டமும் ஒன்று–இரண்டாகவே வேறுபட்ட தோற்றங்களாகவே அறியப்பட்டு காட்சியளிக்கின்றன.

ஆனால், அவற்றின் ஆதாரத் தன்மையை அறிந்தபோது, நாமரூப வேறுபாடு கடந்து, அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் அந்த ஒன்றே வெளிப்படுகிறது.
அலை தன் நீர்த் தன்மையை அறிந்தால், அது கடலிலிருந்து வேறானதல்ல.
பிண்டம் தன் ஆதாரமான விழிப்புணர்வை அறிந்தால், அது அண்டத்திலிருந்து வேறானதல்ல.
வேறுபாடு தோற்றத்தில்;
ஒன்றியம் அதன் ஆதாரத்தில்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment