
பைரவரின் அருள் – 10
விஞ்ஞான பைரவ தந்திரம் – ஸ்லோகம் 24
சமஸ்கிருதம் (தேவநாகரி):
मरुतोऽन्तर्बहिर्वापि वियद्युग्मानिवर्तनात् ।
भैरव्याः भैरवस्यैव भावः प्रकटितो भवेत् ॥ २४ ॥
IAST ஒலிபெயர்ப்பு:
maruto’ntar bahir vāpi viyad-yugmānivartanāt |
bhairavyā bhairavasyaiva bhāvaḥ prakaṭito bhavet || 24 ||
பொருள்:
மூச்சு உள்ளே சென்றாலும் சரி, வெளியே வந்தாலும் சரி, அதன் இரு இயக்கங்களும் அவற்றுக்கிடையேயுள்ள நுட்பமான வெளியில் (வியோமன்) நிலைபெறும்போது, பைரவி மற்றும் பைரவரின் ஒருமை நிலை வெளிப்படுகிறது.
பொருள் விளக்கம்:
இந்த ஸ்லோகம், முந்தைய ஸ்லோகங்களில் கூறப்பட்ட மூச்சுத் தியானத்தை மேலும் ஆழப்படுத்துகிறது.
உள்மூச்சும் வெளிமூச்சும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மூச்சும் தெய்வீக சப்த அதிர்வுகளோடு இயல்பாக இணைந்திருக்கிறது. எங்கும் சஞ்சரிக்கும் காற்று ஆகாயத்திலேயே நிலைபெற்றிருப்பது போல, எங்கும் பரவும் சப்த அதிர்வுகளும் அதே ஆகாயத்தில்தான் நிலைபெற்றுள்ளன.
அதேபோல், உள்மூச்சு மற்றும் வெளிமூச்சோடு தொடர்புடைய நுட்பமான சப்த அதிர்வுகள், இந்த இரு இயக்கங்களுக்கும் இடையில் நாபிக் கமலத்தில் உள்ள அமைதியான நுண்வெளியில் (வியோமன் – Space) நிலைபெறுகின்றன.
அந்த இடைவெளியில் மூச்சைக் கட்டுப்படுத்தாமல், அதன் இயல்பான சப்த அதிர்வை மட்டும் விழிப்புணர்வுடன் கவனிக்கும்போது, உள்மூச்சு–வெளிமூச்சு என்ற வெளிப்படையான இருமை கரைந்து விடுகிறது.
அந்த மௌன வெளியில், பைரவி (சக்தி – தூய ஆற்றல் – Kinetic Energy) மற்றும் பைரவர் (சிவம் – தூய உணர்வு – Potential Energy) ஆகியோரின் பிரிக்க முடியாத ஒருமை தானாகவே வெளிப்படுகிறது.
இந்த பயிற்சி, மூச்சின் இருமையை மட்டும் கரைப்பதற்கான தியானம் அல்ல. வாழ்க்கையில் தோன்றும் அனைத்து இருமை இயக்கங்களுக்கும் இடையில் எப்போதும் மாறாமல் இருக்கும் காலமற்ற விழிப்புணர்வு வெளியை உணர்ந்து அதில் நிலைபெறுவதற்கான உபாயமாகும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

