
பைரவரின் அருள் – 9
விஞ்ஞான பைரவ தந்திரம் – ஸ்லோகம் 23
IAST Transliteration:
ūrdhve prāṇo hy adho jīvo visargātmā paroccaret |
utpatti-dvitaya-sthāne bharaṇād bharitā sthitiḥ || 23 ||
“The upward breath (Prana) and the downward breath (Apana) move continuously, embodying the nature of emanation and absorption.”
“At the two points of origin (the two transition/junction places), by fully filling and absorbing [the breath], the state of absolute fullness (the ultimate reality) is attained.”
பொருள்:
பிராணன் மேல்நோக்கிச் செல்கிறது. ஜீவன் (அபானம்) கீழ்நோக்கிச் செல்கிறது. இவ்விரு இயக்கங்களும் விசர்க்கம் என்னும் இயற்கையான வெளிப்பாடு மூலம் ஒன்றோடொன்று தொடர்புபெறுகின்றன. இந்த இரு இயக்கங்களும் தோன்றும் மாற்றுப் புள்ளிகளில் விழிப்புணர்வை நிலைநிறுத்துபவன், பரம்பொருளின் பரிபூரணத்தால் நிரப்பப்பட்ட நிலையை அடைகிறான்.
பொருள் விளக்கம்:
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்று வள்ளுவர் பெருமான் திருக்குறளில் கூறுகிறார்.
மேல்நோக்கிய உயிரோட்டமான பிராணனும், கீழ்நோக்கிய உயிரோட்டமான அபானனும் இடைவிடாமல் இயக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இவை வள்ளுவர் கூறும் வெளிப்படுத்துதல் (ஈதல்) மற்றும் உள்வாங்குதல் (இசைபட வாழ்தல்) என்ற இரு இயல்புகளாக வெளிப்படுகின்றன.
இந்த இரு இயக்கங்களிலும் ஒரு நுண்ணிய மாற்றம் நிகழ்கிறது. வெளிமூச்சு நிறைவடையும் புள்ளியில் அபானம் பிராணனாக மாறுகிறது; அதாவது ஈதல் இசைப்பட வாழ்தலாக மாறுகிறது;
உள்மூச்சு நிறைவடையும் புள்ளியில் பிராணன் அபானமாக மாறுகிறது: அதாவது இசைப்பட வாழ்ந்தது ஈதலாக மாறுகிறது: இந்த இரு மாற்றுப் புள்ளிகளும் மிக நுண்ணிய அமைதியின் வாயில்களாகும்.
இந்த இரு புள்ளிகளிலும், அதாவது ஈதலிலும் இசைபட வாழ்தலிலும் விழிப்புணர்வை அசையாமல் நிலைநிறுத்தும் சாதகன், தனிப்பட்ட உணர்வைக் கடந்து பரம்பொருளின் பரிபூரண அருளால் (ஊதியத்தால்) நிரப்பப்படுகிறான். அந்நிலையில் எங்கும் நிறைந்த ஒரே உணர்வாகிய பைரவ நிலை தானாகவே வெளிப்படுகிறது.
சுலோகத்தில் வரும் “பரிதா ஸ்திதிஃ (bharitā sthitiḥ)” என்ற சொல், முழுமையாக நிரம்பிய பூரண நிலை என்பதைக் குறிக்கிறது. அந்த நிலையில் உணர்வு தனித்தன்மையையோ, வரம்பையோ உணராது; எல்லையற்ற, நிறைவான சுத்த சைதன்யமாகத் திகழ்கிறது.
வள்ளுவர் பெருமான் கூறும் “ஊதியம் இல்லை உயிர்க்கு” என்ற வாக்கியமும் இதே பரம்பொருளின் அருளாகிய பூரண நிறைவை நோக்கியே சுட்டிக்காட்டுகிறது.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
குறிப்பு:
“இது விஞ்ஞான பைரவ தந்திரத்தின் மூலச் சுலோகத்தின் எங்கள் குரு மரபில் பெற்ற அனுபவ விளக்கம். இது சூஃபி ஞான மரபும் சித்தர் சித்தாந்தமும் ஒருங்கிணைந்த சாதனை அனுபவத்தின் வெளிப்பாடு.

