
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
” உருவும் அருவும் அருவோடு உருவும்
அருவும் பர சிவன் மன் பல் உயிர்க்கு
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தரு என நல்கும் சதா சிவன் தானே.”
குரு என்பது யார்?
பொதுவாக, குரு என்றவுடன் நம் சிந்தனையானது ஒரு பௌதீக உருவத்தை நாடுகின்றது. ஆனால் திருமூலர், குரு என்பது ஒரு பௌதீக பொருள் அல்ல; எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக ஒளிரும் சதாசிவத் தத்துவம் என்று விளக்குகிறார்.
மனிதன் உடலால் வாழ்வதில்லை; அதற்கு ஆதாரமான பிராண வாயுவால் வாழ்கிறான். பிராண வாயும் தனித்து இயங்குவதில்லை; அதற்கும் ஆதாரமாக பரசிவமே உள்ளான். அந்த பரசிவனே எல்லா உயிரின் உள்ளார்ந்த குரு.
உருவும் – அருவும் – அருவோடு உருவும்:
உருவம் என்பது பஞ்சபூத கலவையால் ஆன மானுட வடிவம்.
அருவம் என்பது அந்த உடலுக்கு உயிரோட்டம் தரும் பிராண சக்தி.
அருவோடு உருவம் என்பது அருவமாக விளங்கும் பிராணவாயு என்னும் சூத்திரத்தினால் கட்டப்பட்டு இயக்கப்படும், மெய் ,வாய், கண், செவி, நாசி, என்னும் ஐம்புலன்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மானுட யாக்கை,(யாக்கை என்பதற்கு கட்டுகை மற்றும் உடம்பு என்று பொருள் உள்ளது),
அருவும் பர சிவன் மன் பல் உயிர்க்கு:
“பர” என்பதற்கு கவசம், “மன்” என்பதற்கு மந்திரம் என்ற பொருளும் உண்டு.
(அருவம் உருவம்), அதாவது அருவம் என்னும் பிராணங்கள், அப் பிராணங்களால் கட்டமைக்கப்பட்ட உருவம் என்னும் இவ்வுடம்பு, இவ்விரண்டிற்கும் அதிபதியாக, பர- மன்-சிவன் ஒவ்வொரு உயிரிலும் மந்திரக் கவசமாக உள்ளிருந்து காக்கிறான். நாம் சுவாசிப்பதும், சிந்திப்பதும், உணர்வதும், அறிதலும் அவனது சன்னிதியாலேயே.
அவன் தொலைவில் இருக்கும் கடவுள் அல்ல; உயிரின் உயிராக விளங்கிக் கொண்டிருக்கும் அந்தர்யாமி.
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும் :
“குருவே சிவமெனக் கூறினன் நந்தி” என்ற மற்றொரு திருமந்திர உரையின்படி, அரிதிலும் அரிதான இம் மானுட வடிவத்தை தாங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உயிர்களுக்கும், தாம் ஒரே ஆதி குருவாகவும், ஒரே தூய உணர்வாகவும் விளங்கிக்கொண்டு, மெய்ஞானத்தை போதித்தருளும் கொள்கை கொண்டவன். அதாவது குரு என்பது ஒரு உடல் வடிவம் மட்டுமல்ல; நம் அகத்தில் ஒளிரும் சதாசிவ சன்னிதியே குரு.
தரு என நல்கும் சதா சிவன் தானே:
“தரு” என்பதற்கு கேட்டதை அருளும் கற்பக மரம் என்று பொருள். அவ்வாறு கேட்டதை கொடுக்கும் கற்பகத்தருவை ஒத்த, அருவுமாக சதாசிவன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். ஒருவர் தம்முள் அந்தர்யாமியாக ஒளிரும் அந்த குரு தத்துவத்தை உணர்ந்து, பிராணம், மனம், உடல், ஆகிய அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் பர-மன் -சிவனை அனுபவித்தால், மெய்ஞானம் தானாக மலர்கிறது.
அந்த மெய்ஞானமே மனிதனை சிவத்துடன் ஒன்றிணைக்கிறது. இதுவே சிவம் மனிதனை ஆட்கொள்ளும் பேரருள்.
சிந்தனை:
இந்த திருமந்திரம், உடல், மனம், பிராணன், அந்தர்யாமியாக ஒளிரும் உயிர் சக்தி, குரு, சிவம், தூய உணர்வு ஆகியவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அல்ல என்பதை உணர்த்துகிறது.
பௌதீக உருவில் குரு முதலில் அறியப்பட்டாலும், பின்பு குரு அருளால் மானுட யாக்கையிலும், உயிராகத் துடிக்கும் பிராணனிலும், அதை இயக்கும் பர-மன் -சிவன் சன்னிதியிலும் குருவை அறிய வேண்டும் என்பதே திருமூலரின் உன்னத உபதேசமாகும்.
அவ்வாறு அகத்தில் தம் குருவைக் கண்டவன், சிவமாகவே ஆகிறான்.
திருச்சிற்றம்பலம். 🙏

