
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்,
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்,
சிவன் அருளால் வினை சேர கிலாமை,
சிவன் அருள் கூடின் அச் சிவலோகம் ஆமே.
(திருமூலர்: திருமந்திரம் – 1649)
திருமூலர் இந்தத் திருமந்திரத்தின் வழியாக, சிவனருள் மனிதனை எவ்வளவு உயர்ந்த நிலைகளுக்கு உயர்த்துகிறது என்பதை உணர்த்துகிறார். சிவனருளால் தேவர்க்குரிய பண்புகள் வெளிப்படலாம்; தெய்வத்திற்கொப்பான மேன்மையும் உண்டாகலாம்; வினைகள் அணுகாத தூய்மையான நிலையும் கிட்டலாம். ஆனால், இவற்றிலேயே நிறைவு கண்டுவிடாமல், சிவனருள் முழுமையாகக் கூடித் தன்னகத்தே சிவலோக அனுபவம் மலரும் பரமநிலையை நாடிச் செல்ல வேண்டும் என்பதே இந்தப் பாடலின் ஆழ்ந்த உட்பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.
“ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்பது ஔவையார் இயற்றிய மூதுரை நூலில் இடம்பெற்றுள்ள மிகச்சிறந்த ஒரு பழமொழி.இதன் பொருள்: கொக்கானது தனக்குரிய பெரிய மீன் (உறுமீன்) வரும் வரை, தன்னைச் சுற்றி ஓடும் சிறிய மீன்களைப் (ஓடுமீன்) பற்றிக் கவலைப்படாமல் பொறுமையுடன் காத்திருக்கும்.
அது போன்று சிவன் அருளை நாடும் சாதகர்கள், சிவன் அருளால் கிட்டும் சிறிய மீன்களை ஒத்த தேவர், தெய்வம், வினை சேராமை போன்ற பேறுகளில் திளைத்து அதிலேயே மயங்கி விடாமல், பாதையில் கிடைக்கும் சித்திகள், பெருமைகள் அல்லது ஆன்மிக அனுபவங்களிலும் பற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஏனெனில், சிவன் அருள் கூடி வினை சேராத நிலையிலும் கர்மம் முழுமையாக முற்றுப்பெற வேண்டும்; இல்லையெனில் பிறவாமை என்னும் பெரும் பேற்றை அடைய இயலாது. எனவே, உறுமீன் போன்ற கர்மம் முற்றிலும் நீங்கிய பரமநிலையாகிய சிவலோகத்தைத் தம் அகத்தினுள் உணரும் சிவனருள் கிட்டும்வரை, அதை இடைவிடாது நாடிக்கொண்டே, தம் உள்ளத்தில் வாடியபடியே காத்திருக்க வேண்டும் என்பதே, இந்தத் திருமந்திரத்தின் வழியாக திருமூலர் சிவனருளை நாடுபவர்களுக்கு உணர்த்தும் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த மெய்ஞான அனுபவம் நம் அனைவருக்கும் கிட்ட சிவபெருமானை வேண்டுகிறேன்.
திருச்சிற்றம்பலம். 🙏
.

