“ஸத்சங்கத்வே நிர்சங்கத்வம்”

“ஸத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி.”
—ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம்
ஸத்சங்கத்வே நிர்சங்கத்வம்:
ஸத்ஸங்கம் என்பது ஆன்மீகவாதிகளுடன் கூடுவது மட்டுமல்ல; அது நம்மை உண்மை, தெளிவு மற்றும் நமது உண்மையான இயல்புக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் எந்தவொரு தொடர்பும் ஆகும்.
அந்த வகையில், திருமூலர்  கூறும் “தன்னை அறிய தனக்கொரு கேடு இல்லை” என்ற திருமந்திர வாக்கின்படி, தன்னை அறிவிக்கும் அறிவுடன் — அது பௌதீக குருவாக இருந்தாலும், ஆன்ம குருவாக இருந்தாலும் — ஏற்படும் தொடர்பே உண்மையான ஸத்ஸங்கம்.
அத்தகைய ஸத்ஸங்கத்தின் பயனாக, ‘தனக்கு அந்நியமாகப் பற்றிக்கொள்ள எதுவுமில்லை’ என்ற தெளிவு உதயமாகிறது. அதுவே நிர்சங்கத்வம்.

நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
பற்று மறையும்போது, ‘நான்’ – ‘எனது’ என்ற இருமைத் தோற்றம் வலுவிழக்கிறது. அதன் விளைவாக, இருமையால் உருவாகும் மதிமயக்கம் (மோஹம்) இயல்பாகவே மறைகிறது. இதுவே நிர்மோஹத்வம்.

நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
மோஹம் நீங்கியபின், மனம் வெளிப்பொருட்களால் அலைக்கழிக்கப்படுவதில்லை. இயல்பாகவே அது தெளிவிலும் அமைதியிலும் நிலைத்து நிற்கிறது. இதுவே நிச்சலத்துவம்.

நிச்சலத்வே ஜீவன் முக்தி
இவ்வாறு நிச்சலமான ஞான நிலையில் நிலைபெற்றவன், ஜீவன் முக்தியின் இயல்பான பேரின்பத்தை இவ்வாழ்க்கையிலேயே அனுபவிக்கிறான். இதுவே ஸ்திதப்ரஜ்ஞனின் நிலை.

“ஸத்ஸங்கம்” என்பதை ஒரு நபருடன் கூடி இருப்பது என்று பொருள் கொள்ளாமல்  “தான் யார் என்பதை வெளிப்படுத்தும் அறிவுடன் ஒன்றியிருப்பது” என்பதாக பொருள் கொண்டு உணரும்போது, அதனால் ஆதிசங்கரர் கூறும் காரண–காரியத் தொடர் மிகவும் இயல்பாக வெளிப்படுகிறது:
ஸத்ஸங்கம் → பற்றின்மை → மோஹமின்மை → நிச்சல நிலை → ஜீவன் முக்தி.
இந்த ஐந்து நிலைகளும் தனித்தனி சாதனைகள் அல்ல; ஒன்றிலிருந்து அடுத்தது இயல்பாக தானே மலரும் பரிணாமங்களாகவே இங்கு சித்தரிக்கப்படுகின்றன.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment