
“இடமும் வெளியும் அற்ற தூய சிவம்.”
” சிவத்திற்கும் நமக்கும் இடையே இருப்பது தூரம் அல்ல, கவனச் சிதறல் மட்டுமே. அது ஒரு திரை (அறியாமை) போன்றது. மிக நுட்பமானது. தர்க்க ரீதியாக ‘கடவுள் எங்கும் இருக்கிறார்’ என்று ஒப்புக்கொண்டாலும், ஆழ்மனதில் சிவத்திற்கென்று ‘ஓர் தனி இடம் மற்றும் ஓர் தனி வெளி’ ‘ உள்ளது என்று கருதும் அந்தப் பிளவுதான், கவனச் சிதறல்களுக்கு, அதாவது நாம் நம்முள் இருக்கும் சிவத்தோடு ஒன்றிணையத் தடையாக இருக்கிறது. அந்தத் திரை நீங்கிவிட்டால்; அப்போது நம் சுவாசத்தை விடவும் மிக அருகில் அவரைக் கண்டுணரலாம் .”
சிவம் தனக்கென்று ‘ஓர் தனி இடம் மற்றும் ஓர் தனிவெளி’ அற்றதாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது என்னும் மெய்ஞான உணர்வு, குருவருளால் ஒருவருக்கு உணர்த்தப்படும் போது, அறியாமை என்னும் அத்திரை தானாகவே விலகுகிறது, அதன் காரணம் கவனச் சிதறல்களுக்கு மூலகாரணமாக இருந்து கொண்டிருக்கும் ‘மனம்’ என்பது அங்கு முற்றிலும் நாசம் அடைகிறது.
அந்நிலையில் ஒருவர் தமக்கும் சிவத்தைப் போன்றே ‘இடம் மற்றும் வெளி’ அற்ற நிலையை உணரலாம். அந்நிலையில், அவர்தம் இருப்பை சுட்டிக் காட்டிக் கொள்ள பயன்படுத்தும் ‘நான்’ என்பதே, ‘சிவமாக’ தம் மூலாதாரத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதையும், அது தம்முள் இயங்கும் சுவாசம் என்னும் திருவாசியை விடவும் அருகில் இருப்பதை உணரலாம்!
“வாசி தீரவே, காசு நல்குவீர்” இது ஞானசம்பந்தப் பெருமானால் அருளப்பெற்ற பதிகம் ஆகும். ‘வாசி’ என்பதற்கு ‘மூச்சு மற்றும் வேறுபாடு’ என்றும், ‘காசு’ என்பதற்கு ‘ பொன்’ என்றும் பொருள்கள் உள்ளது.
‘இடம் மற்றும் வெளியால்’ நான் வேறு – சிவம் வேறு’ என்று மனத்தளவில் வேறுபட்டிருக்கும் தம்மிடம் உள்ள குறையை நீக்க, வாசி என்னும் தம் மூச்சை ‘திரு’ என்னும் தெய்வத்தன்மை கொண்ட திரு-வாசியாக்கி (Awareness/Consciousness),, அதன் மூலம் தமக்கும் அவனுக்கும் உள்ள ‘இடைவெளி’ என்னும் வேறுபாட்டுணர்வை அறவே நீக்கி,
பொன்னார் மேனியனாக விளங்கும் அவன் உருவைப் போலவே, தமது உருவையும் குற்றமற்ற பொன்னுடம்பாக்கி, நல்குவீர்- அருள் செய்வீர் என்று வேண்ட, சிவபெருமானும் தாமளித்த பொற்காசில் உள்ள வேறுபாட்டையும், ஞானசம்பந்தருக்கு தம்மிடம் உள்ள ‘இடைவெளி’ என்னும் வேறுபாட்டையும் ஒருசேர அறவே நீக்கி, அவர்தம் உருவையும் தம் உருபோல் பொன்னுடம்பாக்கி, ‘நல்லூர் பெருமணம்’ என்னும் ஊரில் ஜோதி வடிவில் தம்மோடு இணைத்துக் கொண்டார்.
திருச்சிற்றம்பலம், 🙏

