“அந்தர்யாமி (ஆத்மா)”

“அந்தர்யாமி (ஆத்மா)”
” யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ॥”
கடோபநிஷத் 2.23
இதன் பொருள்:
“ஆத்மா யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ, அவரால்தான் அது அறியப்படுகிறது; அவருக்கு ஆத்மா தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது.”

அந்தர்யாமியாக விளங்கும் ஆத்மாவானது, இருமையற்றது, சுயம் பிரகாசமுடையது. எங்கும் அருளாக வியாபித்திருப்பது. ரிஷி யாக்ஞவல்கியரால் பிருஹதாரண்யக உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், வாஸ்துவத்தில் அந்தர்யாமியாக விளங்கும் ஆத்மாவிற்கு அந்நியமாக ஏதும் இல்லை என்பதால்…

இதை இருமை நோக்கில் பார்க்கும்போது, ஆத்மாவும் ஜீவனும் இரு வேறு பொருட்கள் போலத் தோன்றலாம். ஆனால் அத்வைதப் பார்வையில், தேர்ந்தெடுக்கப்படுபவன் வேறு, தேர்ந்தெடுப்பவன் வேறு அல்ல.

மாயையால், ஆத்மாவிற்கு புறம்பாக அனைத்தும் இருப்பதாக கருத வைக்கும் அஞ்ஞான எண்ணங்களே, ஒவ்வொருவர் உள்ளும் அந்தர்யாமியாக சுயம் பிரகாசமாக விளங்கும் ஆத்மாவானது, அருட்பெருஞ்ஜோதியாக தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ள தடையாக இருக்கிறது. ‘தேர்வு’ என்பது ஆத்மாவின் செயல் அல்ல; மாறாக, மாயையினால் விளைந்த அஞ்ஞான எண்ணங்கள் (இருமை) நீங்கும் தருணமே, ஆத்மா தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் தருணமாகும்.

ஓர் உயரிய உருவமற்ற சக்தியாலேயே (அந்தர்யாமியாலேயே) அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை குருவருளால் அறிந்து, உருவமற்ற அதனையே தம் ஸத்குருவாகவே உணர்ந்து சரணடைந்தால் போதும் என்ற பகவான் ரமண மகரிஷியின் அனுபவ உபதேசத்தில் படி வாழ்ந்தால்,

‘இருமை’ அகன்று மனம் எண்ணங்கள் அற்ற நிலையை அடையும்போது, ஆத்மா புதிதாக வெளியில் இருந்து வந்து தன்னை வெளிப்படுத்துவதில்லை; அந்தர்யாமியாக ஒவ்வொருவர் உள்ளும் எப்போதும் சுயம்பிரகாசமாக, பிரகாசித்துக் கொண்டிருக்கும் அதே ஆத்மா, தன்னை மறைத்திருந்த அறியாமை என்னும் இருமை கொண்ட எண்ணங்கள் விலகியதால், தானாகவே வெளிப்படுகிறது. அதாவது அங்கே காண்பவன், காணப்படுபவன் என்ற பேதம் மறைந்து, வெறும் ‘இருப்பு’ (Being) மட்டுமே மிஞ்சுகிறது.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
.

Leave a comment