
விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 7
பண்டைய விக்ஞான பைரவ தந்திரத்தின் ஏழாவது சூத்திரத்தில், ஞானோதயத்திற்கான மற்றொரு நேரடிப் பாதையை சிவன் வெளிப்படுத்துகிறார்:
“ஒவ்வொரு ஓசையும் மரித்துப்போகும், ஆனால் மௌனம் நிலைத்திருக்கும். இரைச்சலைத் துரத்துவதை நிறுத்தி, என்றும் நீங்காத ஒன்றில் பிரவேசியுங்கள்.”
இதன் விளக்கம்:
“கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்போன் மக்களில் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்”. என்று ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 4: ஸ்லோகம்: 18 ல் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்துள்ளார்.
இதில் ‘கர்மம், அகர்மம்’ என்னும் இவ்விரண்டுமே ஓசைக்குள் அடங்கியதுதான். ‘கர்மத்தில் அகர்மம்’ இதன் வழியாக வெளிப்படும் ஓசை மரித்துப் போகும். மாறாக ‘அகர்மத்தில் கர்மம்’ இதன் வழியாக உள்வாங்கப்படும் ஓசை மௌனத்தில் ஒடுங்கி நிலைத்து நிற்கும்
சிவவாக்கிய சித்தரின் பாடலில் உள்ள ‘மாறு கொண்டு ஹூ விலே மடிந்ததே சிவாயமே’ என்ற வரிகள், படைப்பாளராகவும், காப்பாளராகவும், அழிப்பவராகவும் இருக்கும் சிவாயத்தின் பண்புகளை விவரிக்கின்றன; “ஹு” என்ற ஓசை ‘கர்மத்தில் அகர்மமாக’ வெளிப்படும் போது அது மரித்துப் போகும். ஆனால் குரு அருளால் “ஹு” என்ற ஓசை ‘அகர்மத்தில் கர்மமாக’ உள் சுவாசத்துடன் முறையாக பொருத்தப்பட்டு உள்வாங்கப்படும்போது, சிவாயத்தின் அழிக்கும் தன்மை மடிந்து போக, சிவாயம் காப்பாளராக மாறி அழியா தன்மையை அளித்தருளும்.
திருச்சிற்றம்பலம் 🙏

