ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

” ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.”
“அந்தர்யாமி” என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும்; இது “உள்ளிருந்தே கட்டுப்படுத்துபவள்” அல்லது “உள்ளிருந்தே சாட்சியாக இருப்பவள்” என்று பொருள்படும். அந்தர்யாமி என்பவள், ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளும் — குறிப்பாக நாபிக்கமலம் என்னும் மூலாதாரத்தில் — வீற்றிருக்கும், மேலும் படைப்புலகம் அனைத்திலும் வியாபித்திருக்கும் ஒரு தெய்வீக உயர்ச்சக்தியாவாள்.
ரிஷி யக்ஞவல்கியர் இந்த ‘அந்தர்யாமின் பண்பை பிருஹதாரண்யக உபநிஷத்தில் விளக்கியுள்ளார்:
‘அவள் காணப்படாமல் காண்பவள்; கேட்கப்படாமல் கேட்பவள்; உணரப்படாமல் உணர்பவள்; அறியப்படாமல் அறிபவள். அவளைத் தவிர வேறு காண்பவள் இல்லை, அவளைத் தவிர வேறு கேட்பவள் இல்லை, அவளைத் தவிர வேறு உணர்பவள் இல்லை, அவளைத் தவிர வேறு அறிபவள் இல்லை. அதுவே ஒவ்வொருவரின் ஆன்மா, குரு அல்லது கடவுள், உள்ளிருக்கும் உயர் சக்தி, அழியாதது. மற்ற அனைத்தும் அழியக்கூடியது.’
காணப்படாமல் என்பதற்குப் பொருள்: விழிப்பு நிலையில் ஸ்தூல தேகத்தில் பொருந்திய கண்கள் இன்றி, கனவு நிலையில் சூட்சம தேகத்தில் பொருந்திய கண்கள் இன்றி, விழிப்பும், கனவும், இல்லாத கண்கள் மூடிய தியான நிலையிலும், அதாவது என் நிலையிலேயும் கண்கள் போன்றே மற்ற எந்தவொரு புலன்களின் சார்புமின்றி, அனைத்தையும் காண்பவள், கேட்பவள், உணர்பவள், மற்றும் அறிபவள் எவளோ, அவளே ஒவ்வொருவரின் ஆன்மா எனப்படும் “அந்தர்யாமி” உள்ளிருக்கும் உயர் சக்தி, அழியாதது. மற்ற அனைத்தும் அழியக்கூடியது.’
எவர் ஒருவருக்கு, தனிநபராக தான் இல்லாமல் இருக்கும் திறன் குருவருளால் கிட்டுகின்றதோ, அத்தகையவருக்கே அந்தர்யாமியாக விளங்குபவள் ஒளிக்கும் பராசக்தியாக உள்ளிருந்து வெளிப்படுவாள்!
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

