சிவவாக்கியர் சித்தரின் பாடல் 369 ன் விளக்கம்:

“ஆறுகொண்ட வாரியும் அமைந்து நின்ற தெய்வமும்,
தூறுகொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும்,
வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும்,
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”.
என்பது சிவவாக்கியர் சித்தரின் 369 வது பாடல்:


இதில் மாறுகொண்ட ஹூவிலே சிவாயம் எப்படி மடிந்து போகின்றது என்பதைப் பற்றி ஆராயலாம்.
கிருஷ்ண யஜுர் வேதம் சொல்கிறது “நான்” ஒரு நபராக இல்லாமல் சிவமாகவே இருக்கிறேன் என்று. அதாவது எவ்வாறு கடல் அதன் மேற்பரப்பில் தோன்றும் அலைகளை அறியாதோ, அதுபோலவே, “நான்” என்னும் சிவம் அதன் மீது தோன்றும் எந்தவொரு தனி நபரின் அகங்காரத்தையும் அறியாது என்பது பகவான் ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம்.

எப்போது ஒருவர், தனி நபர் என்ற தன் மீது விழுந்த மாய மறைப்பை நீக்கும் திறனை பெறுகின்றாரோ, அப்போது தான் அத்தகையவர் ”நான்” என்னும் இச் ‘சிவத்துடன்’ ஐக்கியமாகி ஒன்றாக முடியும்.

அத்தகைய திறன் என்பது எந்தவொரு தனி நபர் மாறு கொண்ட “ஹூ ” என்னும் இம்மந்திர சப்தத்தால், (ஹூ என்பது ஒரு சமஸ்கிருத சொல் அதற்கு அழைத்தல் என்று பொருள் உள்ளது) ‘மாறு கொண்ட ஹூ’ என்பதற்கு தனக்கு அந்நியமாக சிவமானது வெளியில் உள்ளதாக தவறாக எண்ணி அதை அழைத்துக் கொண்டிருந்ததை குரு அருளால் மாற்றி..

“தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே” என்னும் திருமூலரின் திருமந்திர உரையின்படி, தன் தேகத்தையே “மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்” என்னும் திருமூலரின் மற்றொரு திருமந்திர உரையின்படி, தன் தேகத்தையே சதாசிவமாக அறிந்துணர்ந்து, இம் மாறு கொண்ட ஹூவினால், இடைவிடாது அழைத்துக் கொண்டே, அதாவது அர்ச்சித்துக் கொண்டே இருந்தால்…

பஞ்சகிருத்தியங்கள் எனப்படும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், எனப்படும் ஐந்து அருள் தொழில்களுக்கு அதிபதியான சதாசிவத்தின் ‘மறைத்தல்’ என்னும் தொழிலில் மறைந்துள்ள ‘சிவாயம்’ என்னும் குணம், இம் மாறு கொண்ட ஹூவிலே மடிந்து போக, அதாவது அந்த தனி நபரின் மீது விழுந்த மாயத்திரை முற்றிலுமாக அறுந்துபோக, நான்” என்னும் ‘தூய சிவமானது தன் ஐந்தாவது தொழிலான காக்கும் பேரருளாக, அருட்பெருஞ்ஜோதியாக தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொள்ளும்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment