அப்பர் தேவாரம் 4-11-8

“இல்லக விளக்கது  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.”

இல்லக விளக்கது  இருள் கெடுப்பது,:
இல்: என்பதற்கு மனைவி என்று பொருள் உள்ளது, அகம் என்பதற்கு வீடு என்றும் பொருள் உள்ளது. இல்லகம், அதாவது அகம் என்னும் வீட்டிற்கு இல் என்னும் மனைவியாக வரக்கூடியவள,  இருளை நீக்கும் விளக்கிற்கு ஒப்பாக இருந்து, தான் வாழ வந்த வீட்டில் உள்ள இருளை கெடுத்து எவ்வாறு ஒளிமயமாக வீட்டை பிரகாசிக்க செய்கின்றாளோ அவ்வாறே,

சொல்லக விளக்கது சோதி யுள்ளது,,:
அகம் என்பதற்கு உள் மற்றும் அகப்பொருள் என்று மற்றொரு பொருள்கள் உள்ளது.  அதன்படி, மனைவியை ஒத்த நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரச் சொல்லான இது சோதி யுள்ளது, இது உடம்பு என்னும் வீட்டிற்குள் உட்புகுந்து, அக இருளை கெடுத்து உள்ளுக்குள் இருக்கும் அகப்பொருளை தம் சொல் சோதியால் ஒளிரச் செய்து, வீடு என்னும் இவ்வுடம்பை ஒளிமயமாக பிரகாசிக்கச் செய்கின்றது…

பல்லக விளக்கது பலருங் காண்பது,:
அவ்வாறு சோதி உடல் முழுவதும் பரவி பிரகாசிக்கும் போது அது இயல்பாகவே பலருக்கும் வெளிச்சமாகி, பலரது உள்ளுக்கும் அக விளக்காகி, அதை அப்பலரும் தம்முள்  காணும் படியாகின்றது…

நல்லக விளக்கது நமச்சி வாயவே: எனினும் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரச் சொல்லான இது, அகத்தில்  நல்ல மனம் கொண்டவர்களின் உள்ளுக்குள் மட்டுமே உட் புகுந்து, அதன் அகப்பொருளை தம் சொல் சோதியால் ஒளிரச் செய்யும்.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment