திருமூலர் திருமந்திரம் உரை எண் 469 ன் விளக்கம்:

“அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும் பிறியீர் அதனிற் பெருகும் குணங்கள செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட(து) அறிவீர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.”

அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்: இவ்வுலகில் உள்ள 84 லட்சம் வகையான வகையான ஜீவராசிகளில் மானுட உடம்பை தவிர்த்து, மற்ற எல்லா  உயிரினங்களின் உடம்புகளும், ஐந்தறிவால் ஆகிய, அதாவது, ஓரறிவிலிருந்து ஐந்தறிவுக்குள் ஆக்கப்பட்ட உடம்பை கொண்டவைகள் தான். அரிதற்கு அரியதாய் விளங்கும் இம்மானுட தேகம் மட்டுமே பகுத்தறிந்து அறியும், ஆறறிவால் ஆகியுள்ளது என்பதை எவரும் அறியீர்…

பிறியீர் அதனிற் பெருகும் குணங்கள: அவ்வாறு ஆறறிவால் இவ் உடம்பை உணர்ந்து அறியாததின் காரணம், பிறவிப் பிணிகளுக்கு காரணமான காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம், என்னும் ஏழு குணங்களும், இவ் உடம்பினில் தங்கி பெருகி, அதனிற்:  இவ்வுடம்பிலிருந்து பிறியீர்: பிரிக்க இயலாததாய் ஆகிவிடுவதால்…

செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட(து) : அட்டமா சித்திகளும் பெறக்கூடிய யோகம் ஆறறிவால் பெறப்பட்ட  இவ்-உடம்புக்குள் அடங்கியுள்ளது வெளிப்படாமலேயே போய்விடுகிறது.

அறிவீர் ஐந்தினுள் ஆனது பிண்டமே: இவ்வுலகில் உள்ள எல்லா வகையான உயிரினங்களின் உடம்புகளும், இம்மானுட உடம்பு உட்பட   நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்தின் கலவையால் ஆன பிண்டமே ஆகும். அதாவது ஆறறிவால் அடையப்பட வேண்டிய சித்திகள் இம்மானுட தேகத்திலிருந்து வெளிப்படாமல் போனால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் இவ்வைந்தினுள் ஆன, மற்ற ஆறறிவுக்கும் கீழான உயிரினங்களின் பிண்டங்களுக்கும், இம்மானுட பிண்டத்திற்கும் வேறுபாடு எதுவுமில்லை என்பதை அறிவீர்.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment