
உண்மையில் இறப்பு என்பது என்ன?
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”.
இது வள்ளுவர் பெருமானின் இறப்பைப் பற்றிய திருக்குறள்.
ஒருவர் ஆழ்ந்த உறங்கும் போது அந்நிலையில் ‘நான் எனும் சுட்டும் தன்மை ‘ அங்கு எழுவதில்லை… அதன் காரணம், உடல், மனம், புத்தி, பிராணன், அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தம் , மற்றும் உலகங்கள் போன்ற யாவும், ‘நான் என்னும் சுட்டும் தன்மை’ அங்கு வெளிப்படாததால், இவைகளும் அங்கு உணரப்படுவதில்லை…. எனவே ஆழ்ந்த உறக்க நிலையில் அவருக்கு அவரே இறந்தவராகவே இருக்கிறார்….
உறக்கத்திலிருந்து ஒருவர் விழித்து எழும் அக்கணமே ‘நான் என்னும் சுட்டும் தன்மைதான்’ முதலில் வெளிப்படுகிறது… அதன் காரணம் உடல் மனம் புத்தி பிராணன் ஆனந்தம் போன்ற பஞ்ச கோஷங்களும், உலகங்களும் தனித்தனியாக அங்கு உணரப்படுகின்றன. எனவே விழிப்பு நிலையில் அவருக்கு அவரே பிறந்தவராக உணரப்படுகிறார்.
ஒருவர் இறவா பெருநிலையை அடைய மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டும் என்பதே விதி…
“இறப்பதற்கு முன்பே இறந்துவிடுங்கள்.” இது ஹதீஸில் சொல்லப்பட்டதாக வழக்கத்தில் உள்ள ஒரு அரபிக் வாசகம்…
“நான் கெட்டு சிவமாதல்” இது திருமூலரின் திருமந்திரம்…
“பிணம் போல் கிடந்து” இது பட்டினத்தார் வாக்கு…
சான்றோர்களின் இக்கூற்றின் படி, உறக்க நிலையில் ‘நான் என்னும் என்னும் சுட்டும் தன்மை’ மறைவதால் உருவாகும் இந்த இறப்புணர்வு, மீண்டும் பிறப்புணர்வாக விழிப்பு நிலையில் மாறாமல், இறந்தது இறந்ததாகவே, அதாவது மறைந்த ‘நான் என்னும் என்னும் சுட்டும் தன்மை’ மீண்டும் தோன்றாமல் மறைந்தது மறைந்ததாகவே, தம் விழிப்பு நிலையிலேயேயும், மேலே சொல்லப்பட்ட சான்றோர்களின் வழியில் குருவின் அருள் கொண்டு ஒருவர் தொடர முயற்சித்தால்….
பிறவாமை என்னும் பெரும் பேற்றை, இறப்பதற்கு முன்பே இறந்து விடுவதால், வாழ்ந்து கொண்டிருக்கும் போதே இங்கு அடையலாம்…
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

