திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 2358…

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 2358…
அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே”

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை:
ஆற்றல் ஆக்கப்படுவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை.  ஒவ்வொரு மானுட உடம்பிலும் குடி கொண்டிருக்கும் உயிரானது ஆற்றலின் அம்சமாகவே, ஆக்கமும் அழிவும் இல்லாமல் விளங்கிக் கொண்டிருக்கிறது. உயிர் ஆற்றலின் வெளிப்பாடே அறிவு, எனவே அவ்வகையில்  அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை:

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை:
இவ்வாறு உயிரின் அசைவாக விளங்கும் அறிவே, அவ் உயிரினால் தோற்றுவிக்கப்பட்ட உடம்பில் உள்ள புலன்களின் அறிவிற்கும், புலன்களின் வழியாக உணரப்படும் உலக அறிவிற்கும் ஆதாரமாக இருப்பதால், இவைகளை ஆதாரமாக கொண்டு உருவமற்ற அத்தூய அறிவை அறிய இயலாது.

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு:
எனவே ஒருவர், எவ்வித ஆதாரமும் இல்லாத தன் உருவமற்ற நிலையில்  தன்னை ஒரு கணப்பொழுதேனும் நிலை நிறுத்தி தியானித்தால், அக்கணமே அறிவானது, தனக்குத் தானே ஆதாரமாகி,  அறிவே, அறிவை (தன்னை, உயிரை), அறியும், அறிவாக ஆகிவிடும்.

அறைகின் றனமறை ஈறுகள் தாமே:
இதுவே வேதாந்தத்தின் முடிவான சாரமாக நான்கு வேதங்களும் பறை சாற்றுகின்றன.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment