
அருளும் அருளுடைமையும்
ஒவ்வொருவரின் உடம்பும் மூச்சுக்காற்றால் இடைவிடாது காக்கப்பட்டுக் கொண்டிருப்பதால்…
ஒவ்வொருவருக்கும் மூச்சுக்காற்று அருளாகவும்,
அவ்வருளை உடமையாக்கிக் கொண்ட உடம்பு அருளுடைமையாகவும் ஆகிறது.
ஒவ்வொருவரின் உடம்பினுள் உருவாகும் வெப்பமானது நீரால் தணிக்கப்பட்டு, உடம்பின் சமநிலை இடைவிடாது பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருப்பதால்…
அருந்தும் நீரும், நீராடும் நீரும் அருளாகவும்,
அவ்வருளை உடமையாக்கிக் கொண்ட உடம்பின் உஷ்ணம் அருளுடைமையாகவும் ஆகிறது.
அது போன்று, ஒவ்வொருவரின் வயிற்றுப் பகுதியில் உருவாகும் வெற்றிடத்தால் — ஆகாயத்தால் — பூமியின் அம்சமான உணவு உட்கொள்ளப்பட்டு, அது கிரகிக்கப்பட்டு, ஊட்ட சக்தியாக உடலுக்கு மாறுகிறது.
அவ்வகையில், உண்ணும் உணவானது — பூமியின் அம்சமானது — அருளாகவும்,
அவ்வருளை உடமையாக்கிக் கொண்ட உடம்பினுள் உள்ள வெற்றிடம் — ஆகாயம் — அருளுடைமையாகவும் ஆகிறது.
அதாவது, பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின் கலவையால் ஆன இந்த உடம்பிற்கு, இப்பஞ்சபூதங்களே ஒன்றுக்கொன்று அருளாகவும், அருளுடைமையாகவும் ஆகி, இந்தத் தேகத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றன எனலாம்.
இவ்வாறு அருளுடைமையாக்கப்பட்ட தேகத்தின் தேகபலம், அறிவின் ஆற்றல், சிந்திக்கும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்திறன்களால்…
பஞ்சபூதங்களும் அருளுடைமையாக ஆகிவிடுகின்றன. பஞ்சபூத வடிவாகவே சிவபெருமான் விளங்கிக் கொண்டிருப்பதால், சீவனால் சிவனும், சிவனால் சீவனும் ஒன்றுக்கொன்று அருளாகவும் அருளுடைமையாகவும் ஆகின்றது.
திருச்சிற்றம்பலம். 🙏

