
சார்பும் சார்பின்மையும்
“கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவனே மக்களில் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்.”
என்று ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 4, ஸ்லோகம் 18-ல் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடும் “அகர்மம்” என்பதை வெறும் செயலற்ற நிலை என்று பொருள் கொள்ளாமல், சிவபெருமானின் பேரருளைப் பெற்ற மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில்,
“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே”
என்று பாடியுள்ளபடி, எங்கும் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பதால் போக்கும் வரவும் இல்லாத பேரருளாகிய சிவத்தையே அகர்மம் என்று பொருள் கொள்ளலாம்.
அதுபோல, வள்ளல் பெருமான் தமது அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
“அருளலாது அணுவும் அசைந்திடாது; அதனால்
அருள்நலம் பரவுகென்று உரைத்த மெய்சிவமே.”
என்று அருளியுள்ளார்.
அணுவின் ஒவ்வொரு அசைவும்—அதாவது ஒவ்வொரு கர்மமும்—அருளாலேயே நிகழ்கிறது என்றால்,
“கர்மத்தில் அருளையும் — (அகர்மத்தையும்),
அருளில் கர்மத்தையும் காண்பவனே மக்களில் மேதாவி”
என்பதே கீதையின் இந்த உபதேசத்தின் மெய்ப்பொருளாகக் கொள்ளலாம்.
இவ்வாறு பார்க்கும்போது, கர்மமும் அருளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; கர்மத்தின் உள்ளேயே அருள் இயங்குகிறது. அருளின் வெளிப்பாடாகவே கர்மம் நிகழ்கிறது.
இதனையே வள்ளுவர்,
“சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்
மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.”
என்று திருக்குறளில் உணர்த்துகிறார்.
கர்மமும் அருளும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதை குருவருளால் உணரும்போது, அந்தச் சார்பின் பின்னால் மறைந்திருக்கும் பற்றும் இயல்பாகவே கெட்டுவிடுகிறது.
பற்று கெட்ட நிலையில், செய்பவன் என்ற தன்மையும், செயல் என்ற தன்மையும், அதன் விளைவு என்ற தன்மையும் தனித்தனியாகத் தோன்றாமல், எல்லாமே அருளின் வெளிப்பாடாகவே உணரப்படுகிறது.
அப்போது சார்வதற்கு உரிய பற்றுகள் அழிகின்றன;
அதனால் சார்தரும் துன்பங்களும் மீண்டும் வந்து அடையாது.
கர்மத்தில் அருளைக் காண்பதும்,
அருளில் கர்மத்தைக் காண்பதும் —
சார்பிலிருந்து சார்பின்மைக்குச் செல்லும் ஞானப் பார்வையாகும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ் 🙏

