பைரவரின் அருள் – 16- விஜ்ஞான பைரவ தந்திரம் –ஸ்லோகம் 62

பைரவரின் அருள் – 16- விஜ்ஞான பைரவ தந்திரம் –ஸ்லோகம் 62
यत्र यत्र मनो याति बाह्ये वाभ्यन्तरेऽपि वा ।
तत्र तत्र शिवावस्था व्यापकत्वात् क्व यास्यति ॥
பொருள்:
மனம், வெளிப்புறத்திற்கோ அல்லது உள்புறத்திற்கோ எங்கு சென்றாலும், அங்கேயே சிவநிலை உள்ளது. ஏனெனில் சிவம் எங்கும் நிறைந்திருக்கிறது; ஆகவே மனம் எங்கு சென்றாலும் அது சிவத்திலிருந்து பிரிந்து வெளியே செல்ல முடியாது.

பொருள் விளக்கம்:
பிருஹதாரண்யக உபநிஷதம்: 3:7:20 ல் ரிஷி யாக்யவல்க்கியர் இவ்வாறு கூறுகிறார்:
“யார் மனத்தில் உறைகிறாரோ, மனத்தின் உள்ளே எழுந்தருளுகிறாரோ, யாரை மனம் அறிவதில்லையோ, மனம் யாருடைய திருமேனியோ, யார் மனதின் உள் நின்று அதனை இயக்குகின்றாரோ, அவரே அந்தர்யாமி; அவர் உனது ஆத்மா, அவர் அழிவற்றவர்.”

அவ்வகையில் மனம் என்பது அந்தர்யாமியாக விளங்கும் ஆத்மாவின் “அமானத்” ஆகிறது. அமானத் என்பது அரபிக் வார்த்தை. அதற்கு இருப்பின் முழுமையும் அல்லாஹ்வைச் சார்ந்தது என்பது ஆன்மீகப் பொருள்.

எனவே தான் இந்த ஸ்லோகம் மூலமாக பைரவரும், உபநிஷத்தின் வழியே ரிஷி யாக்யவல்க்கியரும், ‘மனம்’ என்னும் அமானத் (ஒப்படைக்கப்பட்ட பொருள்) எங்கு சென்றாலும், அதன் இருப்பு நிலை சிவநிலையை சார்ந்தே இருக்கும். ஏனெனில் சிவம் எங்கும் நிறைந்திருக்கிறது; ஆகவே மனம் எங்கு சென்றாலும் அது சிவத்திலிருந்து பிரிந்து வெளியே செல்ல முடியாது என்ற கருத்தாக விளக்கி உள்ளனர்.

எனவே ஒருவர் தியானிக்கும் போது தம் மனதை கட்டுப்படுத்தவோ அல்லது அடக்குவோ முயலாமல், மாறாக தன் மனம் சிவத்தினால் ஒப்படைக்கப்பட்ட (கனவினில் உணரக்கூடிய) சூட்சம சொரூபம், அதாவது ரிஷி யாக்யவல்க்கியரின் கூற்றுப்படி, மனம் என்பது ஆத்மாவின் திருமேனி, ஆத்மாவின் அமானத் என்பதை உணர்ந்தபடியே இருந்தால்… அந்த உணர்வே மனத்தை அதன் மூலமான சிவத்தில் இயல்பாகக் கரைத்துவிடும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏