
குணசீலம் ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் – 2
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
‘பிரசன்னம்’ (Prasannam) என்பது சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்த ஒரு சொல்லாகும். இது சமஸ்கிருதச் சொல்லான ‘பிரஸன்ன’ (Prasanna – प्रसन्न) என்பதிலிருந்து உருவானது.
சமஸ்கிருதத்தில் பிரஸன்ன என்பதற்கு தெளிவு, மகிழ்ச்சி, மனநிறைவு, அருள் புரிதல், ஒளிமிக்க நிலை போன்ற பொருள்கள் கூறப்படுகின்றன.
தமிழிலும் பிரசன்னம் என்பதற்கு தெளிவு, கடவுள் அல்லது பெரியோரின் அருட்காட்சி, மகிழ்ச்சி ஆகிய பொருள்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், சமஸ்கிருதத்திலும் தமிழிலும் கூறப்படும் இந்தப் பொருள்கள் அனைத்தும், ஆழ்ந்த ஆன்மீகப் பார்வையில், ஒவ்வொரு உயிரிலும் எப்போதும் விளங்கிக் கொண்டிருக்கும் தூய விழிப்புணர்வின் (Pure Awareness) இயல்பான வெளிப்பாடுகளே ஆகும்.
இந்தத் தூய விழிப்புணர்வின் மகிமையை அருட்பிரகாச வள்ளலார் தமது அருட்பெருஞ்ஜோதி அகவலில் இவ்வாறு போற்றுகிறார்:
“காட்சியும் கானாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி.”
(அகவல் – 153)
ஒவ்வொரு நாளும் நாம் விழித்தெழும் அந்த முதல் கணத்தில், அருட்பெருஞ்ஜோதி என்னும் தூய விழிப்புணர்வே பிரசன்ன சக்தியாக வெளிப்படுகிறது. அதுவே உடல், புலன்கள், இந்திரியங்கள், பிராணன், மனம், புத்தி ஆகிய அனைத்தையும் ஒளிரச் செய்து, அவற்றின் வழியாக உலகை ஒரு காட்சியாக வெளிப்படுத்துகிறது.
இந்தப் பிரசன்ன சக்தி இல்லையெனில், விழிப்பு அனுபவமே ஏற்படாது; மனமும் சித்தமும் இயங்க முடியாது. எனவே நாம் காண்பதும், கேட்பதும், சிந்திப்பதும், அறிவதும் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது இந்தத் தூய விழிப்புணர்வே.
ஆகையால், விழிப்பு நிலையில் காட்சியாகத் தோன்றும் அனைத்திலும் அந்தர்யாமியாக, தம்முள் குடிகொண்டிருக்கும் ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமானின் பிரசன்ன சக்தியே ஒளிர்கிறது என்பதை இடைவிடாது உணர்ந்து வாழ்ந்தால், அந்த உணர்வே இறையனுபவமாக மலரும்.
அப்போது விஷ்ணு ஸஹஸ்ரநாம பல ஸ்ருதியில் கூறப்படும்:
“ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம்”
என்ற வாக்கியத்தின் ஆழமான பொருள் தானாகவே வெளிப்படும். ஒரே விஷ்ணுவே எண்ணற்ற உயிர்களாகவும், பஞ்சபூதங்களாகவும், இப்பிரபஞ்சம் முழுவதும் அழியாத பேராற்றலாக வியாபித்து நிற்கிறார் என்பதை அனுபவமாக அறிய முடியும்.
அத்தகைய அனுபவமே மனிதனை அழிவற்ற பரம்பொருள் நிலையை நோக்கி அழைத்துச் செல்கிறது.
ஓம் நமோ நாராயணாய நமஹா 🙏

