எட்டெழுத்தும் ஓரெழுத்தும்: அகச்சமுத்திரத்தில் ஒரு பயணம்.

எட்டெழுத்தும் ஓரெழுத்தும்: அகச்சமுத்திரத்தில் ஒரு பயணம்.

“துளி கடலில் கலக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் கடல் துளியில் கலக்கிறது என்பது சிலருக்கே தெரியும்.”
கபீர்தாசரின் இந்த வரிகள் ஒரு எளிமையான உதாரணம் போலத் தோன்றினாலும், இதனுள் மறைந்திருக்கும் தத்துவம் பிரம்மாண்டமானது. புற உலகில் ஒரு துளி நீர் கடலில் கலப்பது என்பது இயல்பு. ஆனால், ஒரு சிறிய துளிக்குள் அந்த மகா சமுத்திரமே அடங்கிவிடுவது என்பது நம் சிற்றறிவுக்கு எட்டாத ஒரு நுட்பமான ரகசியம்.

புற உலகம் vs அக உலகம்:
புற உலகில் கடல் என்பது கண்களுக்குப் புலப்படும் பிரம்மாண்டம். அதிலிருந்து பிரிந்த துளி மீண்டும் கடலில் சேர்வதுதான் முக்தி என்று பலர் கருதுகின்றனர். ஆனால் கபீர்தாசர் இங்கே சுட்டிக்காட்டுவது “அக உலகம்” (Inner Consciousness).
இங்கே சமுத்திரம் என்பது, கண்களுக்குப் புலப்படாத நித்திய நீரின் மிகச்சிறிய துகள்களாகக் கருதப்படும் “புருஷத்துவம்”. மகாநாராயண உபநிஷத், “ஆபோ வை நாராயண:” (अपो वै नारायणः) என்று பிரகடனப்படுத்துகிறது. அதாவது, அந்தப் பரம்பொருளே நித்திய நீராக, ஆதியாக விளங்குகிறான்.

பிரகிருதியும் புருஷனும்:
நம்மைக் கட்டுப்படுத்தும் இந்த உலகப் பொருட்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் சேர்ந்து மொத்தம் எட்டு கூறுகளாகப் பிரகிருதி விளங்குகிறது. இந்த எட்டு கூறுகளும் அந்த நித்திய நீரான புருஷத் தத்துவத்தோடு இணையும்போது, அதுவே எட்டெழுத்து மந்திரமான “ஓம் நமோ நாராயணாய” என்று வெளிப்படுகிறது.

ஸ்ரீமத் ராமானுஜர் இந்த உன்னத மந்திரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். சரணாகதியின் அடையாளமாக, ஒரு துளி நீர் கடலில் கலப்பது போல, பிரகிருதியாகிய நாம் அந்தப் புருஷனாகிய நாராயணனில் கலக்கும் நிலையை இந்த மந்திரம் உணர்த்துகிறது.

ஓரெழுத்தின் ரகசியம்:
எட்டெழுத்து மந்திரம் என்பது பிரகிருதியும் புருஷனும் இணையும் ஒரு செயல்முறை என்றால், அதன் உச்சகட்டம் “ஓரெழுத்து” (பிரணவம் – ஓம்)
புருஷனாகிய சமுத்திரத்தின் துகள்கள், பிரகிருதியோடு (துளியோடு) முழுமையாக இரண்டறக் கலக்கும்போது, அங்கு இரண்டாக ஒன்றும் இருப்பதில்லை. அனைத்தும் அந்த ‘ஓம்’ என்ற பிரணவத்தில் ஒடுங்கி விடுகின்றன. இது சொற்களால் விளக்க முடியாத, அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடிய நிலை. இதையே திருக்கோஷ்டியூர் நம்பி, ஸ்ரீமத் ராமானுஜருக்கு தனிப்பட்ட மீண்டும் உபதேசத்திற்க வேண்டும். அதுபோன்றே ஸ்ரீமத் ராமானுஜரால், கூரத் தாழ்வாருக்கு மட்டுமே இது உபதேசிக்கப்பட்டுள்ளது.

குரு அருள் இருந்தால் மட்டுமே அறியக்கூடிய, உள்ளுக்குள் உணரக்கூடிய இந்த மௌனப் பரிமாணம், தேடலில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

முடிவுரை:
எட்டெழுத்து மந்திரம் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும் பாதை என்றால், ஓரெழுத்து மந்திரம் அந்த இறைவனுடனான ஐக்கியம். நாம் வெளியே தேடிக்கொண்டிருக்கும் அந்த சமுத்திரம், நம்மைச் சுற்றியிருக்கும் பிரகிருதிக்குள் ஒரு துளியாகவே மறைந்திருக்கிறது.

அந்தச் சிறு துளியை உணர்ந்து, புருஷன் (சமுத்திரம்) பிரக்ருதியுடன் (துளி) கலப்பதே வாழ்வின் நோக்கம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment