“प्राणस्य प्राणः ” – “ப்ராணஸ்ய ப்ராண:” – “மூச்சின் மூச்சு:”

  “प्राणस्य प्राणः ” – “ப்ராணஸ்ய ப்ராண:” – “மூச்சின் மூச்சு:”
“ப்ராணஸ்ய ப்ராண : ” ( “प्राणस्य प्राणः “) என்ற வாக்கியம், கேன உபநிடதத்தில் (1.2) காணப்படும் ஒரு ஆழ்ந்த தத்துவக் கருத்தாகும்.
சமஸ்கிருதத்தில், இதன் நேரடிப் பொருள் “மூச்சின் மூச்சு” அல்லது “உயிர் சக்தியின் உயிர் சக்தி” என்பதாகும்.

எங்கும் சஞ்சரிக்கும் காற்றானது, ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும்  உயிர் வாழ ஆதாரமான சுவாசமாக இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு கணத்திலும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் சுவாசமானது, இவ் உயிரானது மனிதப் பிறப்பாக தோன்றுவதற்கு முன்னரே, அது எடுத்திருந்த இதர மற்ற எல்லா வகையான பிறப்புகளிலும் சுவாசங்களாக ஓடிக்கொண்டிருந்தது தான். அது போன்று இனி வரும் பிறப்புக்களிலும் சுவாசங்களாக இயங்க போவதுதான்.

அதாவது “உயிர் சக்தியின் உயிர் சக்தியாக விளங்கும் இறைவன்”, அக்கணத்தில் ஒருவர் சுவாசித்துக் கொண்டிருக்கும் சுவாசத்திற்கு மட்டுமே இறைவனாக இருப்பதில்லை, மாறாக  அச் சுவாசத்தின் சுவாசமாக, உயிர் சக்தியின் உயிர் சக்தியாக, அவரது கடந்த கால, நிகழ்கால, மற்றும் இனி வரும் காலங்களின் சுவாசங்களுக்கும், ஒரே இறைவனாகவே இருந்து கொண்டிருக்கிறார் என்பதை குருவருளால் ஒருவர் உணரும்போது,

அதுவரை அவரது அறியப்படாத சுவாசங்களால் உருவான பிறவிப் பிணிக்கு காரணமாக விளங்கும்,

சஞ்சித கர்மா = பல முன் ஜென்ம கர்ம வினைகளின் கூட்டுத் தொகை,

பிராரப்த கர்மா =  முந்தைய பல பிறவிகளில் செய்த கர்மங்களின் (வினைகளின்) மொத்தக் குவியலில் இருந்து, இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதி,

க்ரியமான கர்மா = நிகழ்காலத்தில்  சுய விருப்பத்தின் பேரில் செய்யும் செயல்களும், அவற்றின் உடனடி விளைவுகளும்,

ஆகாமி கர்மா = இனி வரும் பிறவிகளில் மீண்டும்  பிராரப்த கர்மாவாக மாறி அனுபவிப்பதற்கான சஞ்சித கர்மம் மற்றும்  க்ரியமான கர்மங்களில் எஞ்சிய ஒரு பகுதி,

போன்ற இவ்வனைத்து வித கர்மங்களும், அதனால் விளைந்த  இனி விளையப்போகும் கர்ம வினைகளும் இறைவன் அருளால் அக்கணத்தில் நசிந்து போக, உயிர் சக்தியின் உயிர் சக்தியாக விளங்கும் இறைவனோடு, சுவாச சக்தி ஒடுங்க, பிறவாமை என்னும் பெரும் பேரு கிட்டும்.


ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment