
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
“வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே”
வாறே சிவாய நமச்சி வாயநம :
வாறே என்பதற்கு வழி அல்லது முறை என்று இலக்கிய பொருள்கள் உள்ளது.
வழி: என்பதற்கு உள்ளே போவதற்கும், வெளியே வருவதற்கும் என்று பொருள் கொள்ளும்போது,
உள்மூச்சின் வழியாக ‘சிவாய’ என்ற சப்தத்தையும், வெளிமூச்சின் வழியாக ‘நம’ என்ற சப்தத்தையும் குருவருளால் முறையாக பொருத்தி ஜெபிக்கும் போது, ‘நம’ என்பதற்கு ‘வணக்கம்’ என்று பொருள் உள்ளதால், அதுவே வணக்கத்துக்குரிய பிரபஞ்சம் என்னும் அண்டத்தின் உணர்வாக வெளிப்பட்டு ‘சிவாய நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரமாக ஆகின்றது.
‘நம’ என்னும் வெளிமூச்சிலிருந்து, ‘சிவாய’ என்னும் உள்மூச்சாக அது வந்த வழியே திரும்பும்போது, வணக்கத்துக்குரிய உடம்பு என்னும் பிண்டத்துக்குள் உள்ள தூய உணர்வாக வெளிப்பட்டு ‘நம சிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரமாக ஆகி விடுகின்றது.
அவ்வாறாக ஜெபிக்கும் போது அண்டமும் பிண்டமும், பிரபஞ்ச உணர்வும் தனி உடம்பின் தூய உணர்வும், ஒரே பஞ்சாட்சர மந்திரத்துக்குள் ஒன்றிணைக்கப்படுகின்றன.
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை:
அவ்வாறே இந்த மந்திரம் வெறும் வாயால் உச்சரிப்பதல்ல; உயிர் மூச்சோட்டத்தோடு ஒன்றிணைத்து, குருவின் உபதேச நெறிப்படி இடைவிடாது தியானித்து ஜெபித்தால், பிறவிச் சுழற்சியைத் தாண்டும் பெரும்பேரு கிட்டும் .
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம் :
அவ்வாறே ஜெபம் ஆழமடையும் போது, இறையருளால் நம்முள்ளே நிகழும் திருவம்பலக் கூத்தை, அதாவது சிவத்தின் ஆனந்த நடனத்தை தரிசிக்கலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே:
அவ்வாறே செம்பு தீயில் புடமிட்டு பொன்னாக மாற்றப்படுவது போல, பஞ்சேந்திரியங்களால் கட்டுண்டிருக்கும் இந்த உடலும் மனமும், மந்திர ஜெபத்தின் அருளால் தெய்வீக ஒளி பெற்ற பொன்னுடம்பாக உருமாறும்.
சாரம்:
திருமூலர் இப்பாடலில் ,
மூச்சும் மந்திரமும் ஒன்றாக ஆக வேண்டும்,
அண்டமும் பிண்டமும் ஒன்றே என உணரப்பட வேண்டும்,
குரு அருளே அதற்கான ஒரே திறவுகோல்,
இடைவிடாது தொடர்ந்த ஜெபம், பிறவாமை, திருக்கூத்துத் தரிசனம், உடல்-உள்ளம் மாற்றம் ஆகியவற்றை அளிக்கும்.
என்ற மகத்தான யோக இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
திருச்சிற்றம்பலம் 🙏

