“வணக்கத்துக்குரியவன் ஒருவனே”

“வணக்கத்துக்குரியவன் ஒருவனே”
“சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
இவை மாணிக்கவாசக பெருமான் அருளிய சிவபுராணத்தின் அனுபவமிக்க வரிகள்.

பொதுவாக நாம் “நான்”, “நீ”, “அவன்” என்று தன்மை, முன்னிலை, படர்க்கை என வேறுபடுத்திப் பார்க்கிறோம். ஆனால் மெய்ஞானப் பார்வையில், “நான்” என்பதும், “நீ” என்பதும், “அவன்” என்னும் ஒரே பரம்பொருளின் பிரதிபலிப்புகளே அன்றி, தனித்தனி இருப்புக்கள் அல்ல.

உண்மையில் எக்காலத்தும் நிலைத்திருப்பது “அவன்” மட்டுமே. அந்த “அவன்” சிவமாகவும், சிவமயமாகவும், எங்கும் பரந்து நிறைந்திருக்கிறான். “நான்” என்றும், “நீ” என்றும் தோன்றுவது அவனுடைய பிரதிபலிப்பின் வெளிப்பாடே அன்றி, சுயமான இருப்புக்கள் அல்ல.

இதனை அனுபவத்தில் உணர்ந்த பின்னரே மாணிக்கவாசக பெருமான்,
“சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று பாடுகிறார்.
அதாவது அதுவரை “நான் வணங்குகிறேன்”  என்று எண்ணியிருந்தவர், தம் சிந்தையுள் சிவன் நின்ற அதனால், தமக்கு வணங்கும் சக்தியும், வணங்கும் எண்ணமும், வணங்கப்படும் திருவடிகளும் அருளப்பட்டதால், அனைத்தும் அவனே என்பதாக உணர்கிறார். அப்போது, அங்கு வணங்குபவன் இல்லை. வணக்கம் இல்லை வணங்கப்படுபவனாக அவன் ஒருவன் மட்டுமே  இருக்கிறான். அவனே சிவம்.

இதே உண்மை இஸ்லாமிய மரபின் தவ்ஹீத் (ஏகத்துவம்) கொள்கையிலும் ஒலிக்கிறது. வணக்கத்திற்கும் ஆராதனைக்கும் உரியவனாக இருப்பது ஒருவனே; அவனே அல்லாஹ். பலவாகத் தோன்றும் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது ஒரே பரம்பொருள் என்ற உண்மையை வெவ்வேறு ஆன்மீக மரபுகள் தத்தமது மொழியில் வெளிப்படுத்துகின்றன.

எனவே, மனிதன் “நான் வணங்குகிறேன்” என்று கருதும் வரை நுண்ணிய அகங்காரம் மறைந்திருக்கும். ஆனால் ஏகமாய் விளங்கும் சிவன்,  வணங்குகிறேன் என்பவனின் சிந்தையுள் நின்று அருளும்போது, அதனால்  “நான் ” வணங்கினேன் என்ற எண்ணமே கரைந்து விடுகிறது. அப்போது வணக்கமும் அருளும் ஆனந்தமும் அனைத்தும், சிவன் அவனுடைய வெளிப்பாடாகவே அறிந்துணறப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment