திருமூலர் திருமந்திரம் உரை எண் 1726 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1726 ன் விளக்கம்:
மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்: யாக்கை என்பதற்கு உடம்பு என்று பொருள் உள்ளது. அதாவது பொதுவாக மனிதர்கள் மட்டுமில்லாமல் மற்ற ஜீவராசிகளின் உடம்பும் மெய், வாய், கண்,செவி, நாசி என்னும் ஐம்புலன்களோடு, ஐந்தறிவும் கலந்த வடிவங்களாகவே படைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆறறிவோடு படைக்கப்பட்ட மானுட யாக்கையின் வடிவம் மட்டுமே, முழு பிரபஞ்சத்தையும் தம்முள் கொண்ட சிவலிங்க வடிவமாக வெளிப்படுகிறது.

மானுட ராக்கை வடிவு சிதம்பரம்: சிதம்பரம் என்ற சொல், ‘தூய உணர்வு’ என்று பொருள்படும் ‘சித்’ மற்றும் ‘ஆகாசம்’ என்று பொருள்படும் ‘அம்பரம்’ அல்லது வெட்ட வெளி இவ்விரண்டின் கூட்டுறவே சிதம்பரம் என்ற சொல்லாகிறது. அதாவது தன்னை அறியும் அறிவோடு படைக்கப்பட்ட மானுட யாக்கையின் வடிவம் மட்டுமே, சிதம்பர வடிவமாக வெளிப்படுகிறது.

மானுட ராக்கை வடிவு சதாசிவம் : சதாசிவம் என்பதற்கு பொருள்: ஐந்து கர்த்தாக்களுள் முதல்வராய் உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம்; உருவாய் விளங்குதற்கு முன் உயிர்களின் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தம் என்று பொருள் உள்ளது. அதாவது அருவுருவாகிய, ஒளியுருவை அடையும் ஆற்றலோடு படைக்கப்பட்ட மானுட யாக்கையின் வடிவம் மட்டுமே, சதாசிவ வடிவமாக வெளிப்படுகிறது.

மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே : அவ்வாறு ஒவ்வொரு மானுட யாக்கையும், தம் வடிவே சிவலிங்கமாகவும், சிதம்பரமாகவும், சதாசிவமாகவும், இருப்பதை உணர்ந்த அக்கணமே, சிவசக்தியோடு திருக்கூத்து நடைபெறும் வடிவமாகவும் தம்யாக்கை வெளிப்படுவதை உணர்ந்து பேரின்பம் அடையலாம்!

சூஃபி ஞானி ஹஸ்ரத் ரூமி— தன்னுடைய மெய் உணர்தலின் வெளிப்பாடாக—கூறிய ஒரு கூற்று: “நான் ஒரு அற்புதத்திற்காகப் பிரார்த்தித்தேன்; இறுதியில், அந்த அற்புதமே நான்தான் என்பதை உணர்ந்தேன்.”
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment