திருமூலர் திருமந்திரம் உரை எண் 3035 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

“உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி யவனே
இணரும் அவன்தன்னை என்னலு மாகான்
துணரின் மலர்க்கந்தந் துன்னிநின் றானே.”

உணர்வும் அவனே உயிரும் அவனே:
உலகில் உள்ள எண்ணற்ற ஜீவராசிகளில் மனிதப்பிறவி ஒன்றுக்கு மட்டும் தான், தான் கொண்ட மானுட வடிவை உணரும் தன்மை உண்டு. அத்தகைய உணர்வாகி நிற்பவன் ‘ அவனே என்னும் குருவாகி நிற்கும் சிவமே’ஆகும். அவனே அம்மானுட வடிவான உணர்விற்கு ஆதாரமாக விளங்கும் உயிர் வித்தாகவும் இருக்கிறான்.

புணர்வும் அவனே புலவி யவனே: புணர்வும்: சேர்க்கை, அதாவது அவனே – உயிரும் உடலும் சேர்ந்த மானுட வடிவமாகி நிற்பவனே தான் தான் என்பவனாகவும் , அத்தகைய உணர்வு தோன்றா நிலையில் புலவி: ஊடல், அதாவது உயிரும் உணர்வுமாக ஒன்றாய் நிற்கும் அவனே- உயிர் வேறு உடல் வேறு என்பவனாகவும் ஆகிறான்.

இணரும் அவன்தன்னை என்னலு மாகான்:
இணரும்::விரிதல்,, அவ்வாறு உயிரும் உணர்வும் கலந்த சிவம் எனும் ‘ ஓர் நாமம் ஓர் உருவம்’ கொண்ட மானுட வடிவமாக எங்கும் பரந்து விரிந்து நிற்கும் அவன், தன்னை எண்ணுவதற்கு அரியவனாகவும் இருக்கிறான்.

துணரின் மலர்க்கந்தந் துன்னிநின் றானே:
துணர்: பூங்கொத்து, அவ்வாறு உயிரும் உணர்வும் கலந்த மானுட வடிவமாகவே, மலர் பூங்கொத்து போன்று எங்கும் பரந்து விரிந்து, ஆனால் ஒரே கொத்துக்குள் ‘ ஓர் நாமம் ஓர் உருவம்’ என நிற்கும் அவனை, துன்னி: உறைந்து, எவ்வாறு மலர்களில் இருந்து வீசும் நறுமணத்தைக் கொண்டு நல்ல மலர்கள் அறியப்படுகின்றனவோ, அவ்வாறே ஒரே கொத்தாக உள்ள மானுட வடிவங்களிலில் இருந்து வீசும் ஒளியை கொண்டு, உணர்வாகி, உயிராகி கலந்து நிற்கும் அவனே “சிவம்” என அறியும் திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே அவன் உணரப்படுபவனாகிறான்.

திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment