திருமூலர் திருமந்திரம் உரை எண் 2676 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே”

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி: ஓம்எனும் பிரணவம் அ  உ  ம்  என்னும் மூன்று மாத்திரைகளுக்குள், (மாத்திரை என்பது சொல்லின் அளவை குறிப்பிடும் ஒரு முறையாகும்) அடங்கி உள்ள ஒரே மொழியாகும். இதை வேறு எந்த மொழியாலும்,  சொல்லாலும்  சுட்டிக் காட்ட இயலாது.

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு,: இத்தகைய ஓம் என்னும் ஓங்காரத்தில் உள்ள முதல் மாத்திரையான அகாரமே ஒவ்வொரு ஸ்தூல சரீரமாகவும், விழிப்பு நிலையாகவும், இரண்டாவது மாத்திரையான உகாரமே சூட்சம சரீரமாகவும், கனவு நிலையாகவும், மூன்றாவது மாத்திரையான மகாரமே காரண சரீரமாகவும், உறக்க நிலையாகவும், அதாவது ஒரே மொழி கொண்ட ஓங்காரத்துள்ளேயே அனைத்து மனிதப் பிறவிகளும் உரு அருவாக அடங்கி உள்ளது.

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்,:
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன், காணலும் ஆகான், உளன் அல்லன் இல்லை அல்லன், பேணுங்கால் பேணும் உரு ஆகும், அல்லனும் ஆம், என்று நம்மாழ்வார் தம் பாசுரத்தில் பாடி உள்ளபடி, இத்தகைய பல பேதங்கள் ஓம்எனும்  ஓங்காரத்துள்ளேயே அடங்கி உள்ளது.

ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே,: ஒண் என்பதற்கு ஒளி உடைய நெற்றி என்று பொருள். அதாவது இத்தகைய ஓம்எனும் ஓங்காரத்தின் தன்மைகளை முழுமையாக தன்னுள் உணர்ந்து, அதன் மூன்று மாத்திரைகளை முறையாக உச்சரித்தால், நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி காணின் முற்றிலும் அழியாது உடம்பு என்னும் அவ்வையின் குறள் படி, ஒளியுடைய நெற்றியைப் பெற்று முற்றிலும் அழியாத உடம்பாக தன் உடம்பை ஆக்கிக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment