
ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்–என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா! இப்பொருள் அறிவார்–
அன்றாலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. :
அபிராமி அந்தாதி பாடல் 56
அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதே ஒவ்வொரு மானுட தேகமும். அவ்வகையில் ஒவ்வொரு மானுட பிண்டத்திலும் அண்டத்தின் அம்சம் அடங்கி இருக்கிறது. இத்தகைய மானுட உடம்பு ஓர் தாயின் கர்ப்பப்பையில் உருவாகுவதற்கு முன்பு, ஓர் உயிரணு சக்தியாக தந்தையிடமும் இருந்து வந்து ஒன்றாய் அரும்பியவள்…
தாயின் கர்ப்பப்பை வந்தவுடன் பலவாய் விரிந்து, இவ் உடம்பு என்னும் அண்டத்துக்குள் எங்குமாய் நின்றாள். அதாவது இம் மனித உடம்புக்குள் உள்ள ஒவ்வொரு உயிருள்ள செல்களுமாக வியாபித்து இருப்பவன் அன்னை அபிராமியே!
எனினும் அவ்வாறு ஓர் உயிர் அணுவில் இருந்து அரும்பி, விரிந்து, இத்தேகம் முழுவதும் வியாபித்து நின்றவள், அனைத்தையும் நீங்கி, ஓர் அணுவாய் இத்தேகத்துக்கு உள்ளேயே தனித்தும் நின்று ஆட்சி புரிகிறாள்.
அப்படிப்பட்டவள் என் நெஞ்சினுள்ளே மறைபொருளாக உறைந்திருப்பதை…
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” : என்னும் திருமூலரின் திருமந்திர உரையின்படி…
என்னுள்ளேயே உறைந்திருக்கும் காத்தல்(வளர்த்தல்) என்னும் தன்மைக்கு அதிபதியான அன்றாலிலையில் துயின்ற திருமாலும், அழித்தல் என்னும் தன்மைக்கு அதிபதியான என் ஐயனாகிய சிவத்தை தவிர வேறு எவர் அறிவார் அவளை!
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

